ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள் அதிக சம்பளத்தில் சீனாவின் விமானப்படைக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள்.
சீனாவின் “மக்கள் விடுதலை இராணுவம்” தனது விமானப்படை விமானிகளுக்கு போர்த் தந்திரம் கற்றுக்கொள்ள பிரிட்டிஷ் விமானப்படையின் ஓய்வுபெற்ற வீரர்களை ஆசிரியர்களாக்கியிருக்கிறது. சுமார் 240,000 பவுண்டுகள் வருடச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் அவர்கள் சீனாவின் விமானிகளுக்கு மேற்கு நாடுகளின் விமானப்படையை எப்படி வெல்வது என்று கற்பிக்கிறார்கள்.
பிரிட்டிஷ் அரசின் விமானப்படையின் விமானிகள், ஹெலிகொப்டர் விமானிகள் மட்டுமன்றி மற்ற மேற்கு நாட்டு விமானிகளும் சீனாவின் விமானப்படையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் இராணுவம், உளவுத்துறை ஆகியவை தமது விசனத்தைத் தெரிவித்திருக்கின்றன. அது மேற்கு நாடுகளின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியலாம் என்று அந்த எச்சரிக்கை குறிப்பிடுகிறது.
ஏற்கனவே பிரிட்டிஷ் விமானப்படையில் ஓய்வுபெற்ற சுமார் 30 விமானிகள் சீனாவின் விமானப்படையில் சேர்ந்துவிட்டிருப்பதால் மேலும் பலர் அவ்வழியில் சென்றுவிடலாகாது என்ற எண்ணத்துடன் பிரிட்டிஷ் உளவுத்துறை தமது ஓய்வுபெற்ற விமானிகளுடன் தொடர்பு கொண்டு எச்சரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்