டுவிட்டருக்கு அடுத்ததாக மெத்தா பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கனுப்பவிருக்கிறது.
ஒரு வழியாக டுவிட்டர் நிறுவனத்தைக் கொள்வனவு செய்த எலொன் மஸ்க் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரிலிருந்து ஆரம்பித்து 3,000 க்கும் அதிகமானோரை பணியிலிருந்து நீக்குகிறார். மொத்தமான சுமார் 7,500 பேரில் பாதிப்பேரை நீக்குவதுடன் நிறுவனத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்து அதை இலாபகரமாக்குவது தனது நோக்கம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பேஸ்புக் நிறுவனத்தின் தலையான மெத்தாவும் தனக்குக் கீழிருக்கும் நிறுவனங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோரை பணியிலிருந்து விலக்கவிருப்பதாக அமெரிக்கச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பேஸ்புக், இன்ஸ்டகிராம், வட்ஸப் நிறுவனங்களைத் தனக்குக் கீழ் வைத்திருக்கும் மெத்தாவில் சுமார் 87, 000 பேர் வெவ்வேறு நாடுகளில் பணிபுரிகிறார்கள். மார்க் ஸுக்கன்பெர்க் மெத்தா நிறுவனத்தை ஆரம்பித்து அதன் கீழிருக்கும் சமூகவலைத்தளங்களின் அடிப்படையை மாற்றியமைத்து வித்தியாசமான சேவைகளை அறிமுகப்படுத்தப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
அந்த மாற்றங்களை ஆரம்பித்ததிலிருந்தே பேஸ்புக் பல வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. மெத்தா நிறுவனத்தின் இலாபம் குறைந்து அதன் பங்குகளின் விலையிலும் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டது. பல நிறுவன ஆராய்வாளர்களும் ஸுக்கன்பெர்கின் மாற்றங்கள், நிர்வாகம் ஆகியவற்றைக் கரித்துக் கொட்டி வருகிறார்கள். அதன் மூன்றாவது காலாண்டு அறிக்கையும் இலாப வீழ்ச்சியைக் காட்டியது. அதையடுத்து வந்த பணியாளர்கள் குறைப்புச் செய்தியானது ஒரேயடியாக ஒரு நாளில் பங்கு விலைகளை 25 % ஆல் வீழ்த்தியிருக்கிறது.
டுவிட்டர், மெத்தா மட்டுமன்றி சமீப காலத்தில் பல தொழில்நுட்பச் சுறாக்களும் தமது இலாபங்கள் குறைந்து வருவதை அறிவித்து வருகின்றன. அதன் விளைவாக அவர்கள் தத்தம் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். ரஷ்யா – உக்ரேன் போரால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, வர்த்தகப் பின்னடைவு வெற்றிகரமாகச் செயற்பட்டு வந்த தொழில்நுட்ப நிறுவனங்களையும் தாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்