எந்த ஒரு உலகக் கோப்பை நடத்துவதற்கும் செலவிடப்படாத தொகையை கத்தார் உதைபந்தாட்ட விழாவுக்காகச் செலவிடுகிறது.
உலகக்கிண்ணப் பந்தயங்கள் நடத்துவதற்காக இதுவரை எந்த ஒரு நாடும் செலவிடாத அளவு தொகையை நவம்பர் 20 ம் திகதி ஆரம்பிக்கவிருக்கும் உதைபந்தாட்டத்தின் விழாவுக்காகச் செலவிருக்கிறது கத்தார். இதற்கு முன்னர் நடந்த ஏழு உதைபந்தாட்டக் கிண்ணக் கோப்பைகளுக்கான பந்தயங்களுக்கான செலவுகளை ஒன்றுசேர்த்தால் அதைவிட ஐந்து மடங்கு அதிக தொகையைச் செலவிடுகிறது கத்தார்.
1998 இல் பிரான்ஸ் நடத்திய உலகக்கோப்பைப் பந்தயங்கள் சமயத்தில் கட்டப்பட்ட அரங்கான Stade de France க்குச் செலவு சுமார் 1 பில்லியன் எவ்ரோக்களாகும். கத்தாரில் இறுதிப் பந்தயம் நடக்கவிருக்கும் அல் பைத் அரங்குக்கான கட்டடச் செலவு ஆகக்குறைந்தது 3 பில்லியம் எவ்ரோக்களாகும். விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் விதமாக அதே போன்ற ஆறு புதிய நவீன ரக அரங்குகளை 2022 உதைபந்தாட்ட விழாவுக்காகக் கட்டியிருக்கிறது கத்தார்.
தனது நாட்டில் உலகக்கோப்பைப் பந்தயங்களை நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யும்போது மோதல்கள் நடக்கும் அரங்கங்கள் எல்லாமே தலைநகரான டொஹாவைச் சுற்றிய 55 கி.மீ தூரத்துக்குள் ஒரு வட்டத்தினுள் அமைக்கப்படுமென்று உறுதியளித்திருந்தது. அவைகளை இணைக்கும் போக்குவரத்துகளையும் லுசாய் என்ற ஒரு நவீன நகரையும் கூட கத்தார் கட்டியிருக்கிறது. நகரமானது வசதியான உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் ஹோட்டல்கள், விளையாட்டு மையங்கள், துறைமுகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. தனியான ஒரு விமான நிலையமும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
கத்தார் அரசின் உதைபந்தாட்டப் பந்தயங்களுக்கான செலவுகளில் போக்குவரத்து, நகரம், உல்லாச வசதிகள் போன்றவை சேர்க்கப்படாமலே அது இதுவரை எவராலும் செலவிடப்படாத தொகையைத் தொட்டிருக்கிறது.
அரங்கங்களில் ஒன்றான 40,000 பேரைக் கொள்ளக்கூடிய அரங்கம் 974 வித்தியாசமானதும் பலமுனைப் பாவிப்பை நோக்காகக் கொண்டதுமாகும். சரக்குக் கப்பல்களில் பாவிக்கப்படும் 974 கொள்கலங்களை மீள்பாவிப்புக்கு உட்படுத்தி அவ்வரங்கம் கட்டப்பட்டிருக்கிறது. அது போட்டிகள் முடிந்ததும் தனித் தனிப் பாகங்களாகக் கழற்றப்பட்டு வேறு இடமொன்றில் பொருத்தக்கூடியதாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்