உலகக்கோப்பை மோதல்களின் மூன்றாவது நாளில் ஆர்ஜென்ரீனாவைக் கவிழ்த்தது சவூதி அரேபியா.
கத்தாரில் நடக்கும் உதைபந்தாட்ட மோதல்களை வென்று வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றப்போகிறது என்று ஆர்ஜென்ரீனாவின் மீது பந்தயம் கட்டியவர்களுக்கு மரண அடியாகியது சவூதி அரேபியா. மோதலின் ஆரம்பத்தில் ஆர்ஜென்ரீன வீரர்கள் தமது நுட்பமான, விளையாட்டால் தமது விசிறிகளைச் சந்தோசப்படுத்தினார்கள். சில நிமிடங்களிலேயே பெரும் ரசிகர் வட்டத்தை அராபிய நாடுகளிலேயே வசப்படுத்தி வைத்திருக்கும் மெஸ்ஸி ஒரு கோல் போட்டு தனது நாட்டை 1 – 0 என்ற நிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆர்ஜென்ரீனா மீண்டும் மீண்டும் சவுதி அரேபியாவின் வலைக்குள் பந்துகளை உதைத்துத் தள்ளியது. மொத்தமாக மூன்று கோல்கள் ஏற்கப்படாமல் போனது.முதலாவது பாதி விளையாட்டு முழுவதும் ஆர்ஜென்ரீனாவின் பக்கமிருந்த வெற்றித் தேவதை இரண்டாம் கட்டத்தில் படு வேகமாக சவூதியின் பக்கம் சாய்ந்தாள். 48 ம் 53 ம் நிமிடங்களில் சவூதி அரேபியாவின் சாலெ அல் – ஷெஹ்ரியும், சலெம் அல் -டௌசரியும் சவுதி அரேபியாவுக்காக ஆளுக்கொரு கோல் போட்டார்கள்.
பார்வையாளர் அரங்கத்திலிருந்த சவூதி அரேபியர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மோதல் முடியும்வரை அவர்களின் ஆட்டம் பாட்டுக்களுடன் சவூதியின் வெற்றியை அராபிய உலகமே கொண்டாடியது எனலாம். மேலதிகமாக நிமிடங்களுடன் சேர்த்து 100 நிமிடங்கள் தொடர்ந்த மோதலில் சவூதி அரேபியாவின் 2 – 1 என்ற வெற்றியே நிலைத்தது.
சாள்ஸ் ஜெ. போமன்