விஸ்தாராவும், எயார் இந்தியாவும் ஒன்றிணைந்து ஒற்றை விமான நிறுவனமாக்கப்படுகின்றன.
இந்திய அரசிடமிருந்து டாட்டா நிறுவனம் கொள்வனவு செய்த எயார் இந்தியா, விஸ்தாரா எயார்லைன்ஸ் உடன் சேர்ந்து ஒரே நிறுவனமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வருட ஆரம்பத்தில் டாட்டா அந்த நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே காற்றில் அடிப்பட்ட செய்தி உண்மையென்று தெளிவாகியிருக்கிறது. அந்த இரு விமான நிறுவனங்களின் ஒன்றுபடுதல் 2024 மார்ச் மாதமளவில் நிறைவடையும்.
டாட்டா குரூப் நிறுவனத்தின் உடமையாக இருக்கிறது எயார் இந்தியா. விஸ்தாராவின் 51 விகித பங்குகளை டாட்டா சன்ஸ் நிறுவனமும் மிகுதியை சிங்கப்பூர் எயார்லைன்ஸும் வைத்திருக்கின்றன. அவையிரண்டும் சேர்ந்தே புதிய எயார் இந்தியா நிறுவனத்தை நடத்தவிருக்கின்றன. தேவைப்படும் பட்சத்தில் மேலும் அதிக முதலீடுகள் அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“நாங்கள் எயார் இந்தியாவைக் கொள்வனவு செய்தபோதே குறிப்பிட்டபடி அதை ஒரு உலகத் தரமான விமான சேவை நிறுவனமாக்குவதில் இது ஒரு படியாகும். இதன் மூலம் எங்கள் சேவையைப் பெறும் ஒவ்வொரு நுகர்வாளருக்கும் நிறைவான திருப்தியைக் கொடுப்பதே எங்கள் நோக்கம்,” என்று தமது திட்டத்தைப் பெருமையுடன் அறிவித்தார் டாட்டா சன்ஸ் நிறுவன அதிபர் எ. சந்திரசேகரன்.
சாள்ஸ் ஜெ. போமன்