ஒன்பது மோதல்களில், நேரடியாக வலைக்குள் போடுவதில் ஏழு தடவைகள் தோற்றுப்போன இங்கிலாந்து வீரர்களுக்கு மூச்சுப்பயிற்சி.
ஞாயிறன்று நடக்கவிருக்கும் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கான மோதலொன்றில் இங்கிலாந்து செனகலை எதிர்கொள்ளவிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களுக்கு அந்த மோதல் பற்றியிருக்கும் மரண பயம் மோதல் முடிவு சரிசமனாக இருந்து நேரடியாக வலைக்கு பந்தை உதைத்தல் மூலம் நிறைவு செய்வது பற்றியதாகும். காரணத்தைச் சொல்கின்றன புள்ளிவிபரங்கள். முக்கியமான சர்வதேச மோதல்கள் ஒன்பதில் இங்கிலாந்தின் தோல்வி வீரர்கள் அச்சமயத்தில் தமது கவனைத்தை ஒன்றுபடுத்திக்கொண்டு பந்தை உதைக்கத் தவறிக் கோட்டை விட்டதாலாகும்.
அதனால் இந்த உலகக் கோப்பை மோதல்களில் பங்குபற்றும் வீரர்களுக்கு அந்த நிலைமையில் மன அழுத்தம் ஏற்படும்போது தமது கவனத்தைச் சிதறவிடாமல் செயற்படுவது பற்றி மனோதத்துவவியலாளர்கள் கற்பிக்கிறார்கள். இங்கிலாந்து அணியில் விளையாடும் டெக்ளன் ரைஸ் தமக்கு அதற்காக மூச்சுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மூச்சுவிடுதலை ஒழுங்குபடுத்துதல் மூலம் தமக்குள் ஏற்படும் பரபரப்பை வீரர்கள் எப்படி வெல்லலாம் என்று அந்த உளவியல் அறிஞர்கள் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
கடந்த வருடம் கோடையில் நடந்த ஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்துக்கான மோதலின் கடைசிக் கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம் அவர்களால் தமக்குள் ஏற்பட்ட படபடப்பை அடக்க முடியாமல் பந்தை உதைப்பதில் தோல்வியடைந்ததேயாகும். அணியின் நட்சத்திர வீரர்களே அந்தச் சந்தர்ப்பத்தில் அத்தவறைச் செய்து பெரிதும் இகழ்ச்சிக்கு உள்ளானார்கள். கத்தாருக்கு வந்ததிலிருந்தே மனதை ஒருமைப்படுத்திக்கொண்டு வலைக்குள் பந்தப் போடுவது பற்றி அணியினர் பிரத்தியேகப் பயிற்சி எடுத்து வருவதாகவும் ரைஸ் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்