ரஷ்யாவுக்குள் நுழைந்து போர் விமானத்தளங்களைத் தாக்கினவா உக்ரேன் காற்றாடி விமானங்கள்?
டிசம்பர் 5, 6 ம் திகதிகளில் ரஷ்யாவுக்குள் சில போர் விமானத்தளங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு ஏற்பட்ட பாதிப்புக்கள் எவை என்பதை முழுவதுமாக அறிவிக்காவிட்டாலும் தாக்குதல் நடத்தியது உக்ரேன் என்றே குற்றஞ்சாட்டியிருக்கிறது. சரதோவ், ரியஸான், எங்கெல்ஸ் – 2 ஆகிய விமானத்தளங்களில் நடந்த தாக்குதல்கள் உக்ரேனால் செலுத்தப்பட்டவையாகவே இருக்கும் என்று பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தாக்கப்பட்டிருக்கும் விமானத்தளங்கள் பற்றிய படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன. அவைகளில் ரஷ்யாவின் குண்டுகாவும் விமானங்கள், விமானத்தளத்திலிருக்கும் ஆயுதங்கள் வெடித்து எரிவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நடந்த தாக்குதல்கள் பற்றி உக்ரேன் பக்கத்திலிருந்து எவ்வித செய்திகளும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக உக்ரேன் மீது ரஷ்யாவின் போர் விமானங்களும், குண்டு தாங்கிய காற்றாடி விமானங்களும் தாக்குதல் நடத்தி வருகின்றன. நாட்டின் தலைநகரமான கியவ் உட்படப் பல நகரங்களும் தாக்கப்பட்டு வருகின்றன. அத்தாக்குதல்களின் முக்கிய குறிகளாக இருப்பவை சமூத்தின் அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்திசெய்யும் நீர், மின்சாரம், எரிபொருள் வினியோக மையங்கள் ஆகும். அதனால் நாட்டில் பல பகுதிகளிலும் அவ்வசதிகள் இல்லாமல் போயிருப்பதாக உக்ரேன் அரசு விபரங்களை வெளியிட்டிருக்கிறது.
உக்ரேனில் குளிர்காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில், அச்சமயத்தில் அவசியமான மின்சாரம், குடி நீர் போன்றவற்றை இல்லாமல் செய்திருப்பது, ஆகக்கூடிய எண்ணிக்கையில் மனித அழிவை ஏற்படுத்தி அதன் மூலம் உக்ரேனை அடிபணிய வைக்கும் முயற்சியே என்று உக்ரேன் உட்பட்ட பல நாடுகள் சுட்டிக் காட்டுகின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்