அமெரிக்காவிடமிருந்த தமது ஆயுத வியாபாரிக்காக கூடைப்பந்து நட்சத்திரத்துக்கு விடுதலை கொடுத்தது ரஷ்யா.
உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் நுழையச் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் ஒலிப்பிக் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்டனி கிரினர். தனது மருத்துவத் தேவைக்காக அவரிடம் சிறிய அளவில் கஞ்சா எண்ணெய் இருந்தே அதற்குக் காரணம். அமெரிக்காவில் சட்டரீதியாக அனுமதிக்கப்படும் அது ரஷ்யாவின் சட்டப்படி மிகப்பெரும் குற்றமாகும். ஒன்பது வருடங்கள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
உக்ரேன் மீதான போரில் எதிரெதிர் முகாம்களாக மாறிவிட்ட அமெரிக்க – ரஷ்ய உறவில் கிரினர் பகடைக்காயானார். அவரை விடுவிக்க அமெரிக்க அதிகாரிகள் வெவ்வேறு மட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.
இரு தரப்பாரிடையேயான பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவர் தற்போது விடுதலையாகி அமெரிக்காவை நோக்கி விமானமொன்றில் திரும்பிக்கொண்டிருப்பதாக அமெரிக்க அரசின் செய்திகள் தெரிவிக்கின்றன. அபுதாபியில் வைத்து விடுவிக்கப்பட்ட கிரினருடன் ஜனாதிபதி ஜோ பைடனும், உப ஜனாதிபதி கமலா ஹாரிஸும் தொலைபேசியில் சம்பாஷித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ரஷ்யா கிரினரை விடுதலை செய்வதற்குப் பதிலாக 2008 இல் அமெரிக்காவால் தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட ரஷ்ய ஆயுத வியாபாரி “மரண மரணவியாபாரி” என்று அழைக்கப்படும் விக்டர் பௌட்டை அமெரிக்கா விடுதலை செய்திருக்கிறது. எவர் கேட்டாலும் அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை விற்றுவந்ததாக பௌட் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டி 25 வருடச் சிறைத்தண்டனை விதித்திருந்தது. பௌட் ஒரு நிரபராதி என்று கூறி அவரை விடுதலை செய்யும்படி நீண்ட காலமாக ரஷ்யா கோரிவந்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்