மாசுபட்ட காற்றிலிருக்கும் நச்சுக்களை உறிஞ்சியெடுத்துப் பாவனைப் பொருட்களாக மாற்றும் அமெரிக்க நிறுவனம்.
அமெரிக்காவில் சிக்காகோ நகரிலிருக்கும் நிறுவனமொன்று குப்பைகளில் இருந்து உறிஞ்சியெடுத்தவற்றை ஆதாரமாக வைத்து பாவனைக்கு உகந்த பொருட்களாகமாற்ற ஆரம்பித்திருக்கிறது. LanzaTech என்ற அந்த நிறுவனம் சுமார் 15 வருடங்கள் ஆராய்ச்சி செய்ததன் மூலம் குறிப்பிட்ட நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி பாவித்த பொருட்களிலிருந்து நச்சுவாயுக்களை எடுத்து, அதிலிருந்து வரும் மூலப்பொருளைத் தனது உற்பத்திக்குப் பாவிக்கிறது. மூன்று சீனத் தொழிற்சாலைகளுடன், அவைகளுடைய தயாரிப்பு எச்சக் குப்பைகளை அவ்வழியில் மாறுவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டு தனது உற்பத்தியை ஆரம்பித்திருக்கிறது.
கரியமிலவாயுவை முதல் கட்டமாக எதனோல் எனப்படும் எரிபொருளாக மாற்றி அதிலிருந்து பிளாஸ்டிக் போத்தல்கள், விளையாட்டுப் பயிற்சிக்கான உடைகள் போன்றவை தற்போது தயாரிக்கப்படுகின்றன. சுமார் 200,000 மெட்ரிக் தொன் கரியமிலவாயுவைப் பயன்படுத்தி 190,000 லிட்டர் எதனோல் தயாரித்திருப்பதாக LanzaTech குறிப்பிடுகிறது.
அதே நிறுவனம் இன்னொரு கிளை நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் சூழலுக்கு இணைவான விமான எரிபொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் அதன் நிறுவனர்களில் ஒருவரான மைக்கல் கொப்கே குறிப்பிடுகிறார். தற்போது அப்படிப்பட்ட எரிபொருள் தானியங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அது உலக மக்களுக்கு உணவாகக்கூடியத் தானியத்தை எரிபொருளாக்குவதால் மாற்று அடிப்படைப் பொருட்கள் நாடப்படுகின்றன. அதையே LanzaJet என்ற நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. தமது விமான எரிபொருள் தயாரிப்பு 2030 இல் சுமார் ஒரு பில்லியன் கலன்களை எட்டும் என்கிறார் கொப்கே.
LanzaTech நிறுவனத்தின் கண்டுபிடிப்பு 2022 க்கான Earthshot பரிசைப் பெறப் பிரேரிக்கப்பட்டிருந்தது. Earthshot பரிசானது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், சூழல் மேம்பாட்டு ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ ஆகியோரினால் வழங்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காமல் சாதாரணப் பொருட்களை உண்டாக்கக் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களில் ஒன்றுக்கு வருடாவருடம் அப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்