கொசோவோ விடுதலைப் போராளிக்கு போர்க்குற்றங்கள் செய்ததாக 26 வருடச் சிறைத்தண்டனை.
கொசோவோவின் விடுதலைப் போர்க்காலத்தில் தனது மக்கள் மீது சித்திரவதை, கொலைகள் ஆகியவற்றைச் செய்ததற்காக சாலி முஸ்தபா என்பவருக்கு ஹாக் [Haag] பிரத்தியேக நீதிமன்றம் 26 வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. அந்தக் குற்றங்கள் 1998- 1999 காலத்தில் செர்பியர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்காகக் கொசோவா அல்பானியர்கள் ஆயுதப்போரில் ஈடுபட்டிருந்தபோது நடத்தப்பட்டிருந்தன.
சாலி முஸ்தபா 2020 இல் கைதுசெய்யப்பட்டபோது கொசோவாவின் பாதுகாப்பு அமைச்சில் உயர் நிர்வாகப் பதவியிலிருந்தார். போர்க்காலத்தில் முஸ்தபாவின் கொசோவோ விடுதலை அமைப்பானது நாட்டின் விடுதலைப் போராளிகள் என்று கருதப்பட்டனர். அவர்கள் தமது சொந்த மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன் போர்க்குற்றங்கள் செய்ததாக 2020 இல் ஐரோப்பிய மன்றம் தனது விசாரணைகளின் பின்பு அறிக்கை வெளியிட்டது.
முஸ்தபா மீது மட்டுமன்றி கொசோவோ அரசின் உயர்மட்டத்திலிருந்த வேறு சிலர் மீதும் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. கொசோவோவின் முதலாவது பிரதமராகிப் பின்னர் ஜனாதிபதியாகிய ஹாசிம் தாச்சியும் அவர்களில் ஒருவராகும். தாச்சி இன்னும் கைதுசெய்யப்படவில்லை. அவர் மீதான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
அதனால், கொசோவோ அரசு விசாரணைகள் நடத்த ஆரம்பத்தில் விரும்பவில்லை. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கட்டாயப்படுத்தியதின் விளைவாக நெதர்லாந்தில் பிரத்தியேக நீதிமன்றமொன்று கொசோவோ நாட்டுச் சட்டங்களுக்கு இணங்க ஏற்படுத்தப்பட்டது. நடுநிலைமையைப் பேணுவதற்காக அதன் நீதிபதிகளாகச் சர்வதேச நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். முஸ்தபா மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்காக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அந்த நீதிமன்றத்தின் முதலாவது தீர்ப்பு இதுவாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்