ரொட்டர்டாம், போதைப்பொருட்கள் ஐரோப்பாவுக்குள் எல்லையின்றி நுழைய விரியத் திறந்திருக்கும் வாசலா?

ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது, நெதர்லாந்தின் டொட்டர்டாம். அந்த நகரின் விருப்பமில்லாத விருந்தாளியான கொகெய்னுக்கும் அந்தத் துறைமுகமே மிகப்பெரிய வாசலாகத் திறந்திருக்கிறது என்பது வருத்ததுக்குரிய விடயம் என்கிறார் சுங்கத்துறைத் தலைமை நிர்வாகி கேர் ஷிரிங்கா [Ger Scheringa]. 

ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் விற்கப்படும் கொகெய்னின் மூன்றிலொரு பங்கு ரொட்டர்டாம் மற்றும் பெல்ஜியத்தின் அண்ட்வெர்ப் துறைமுகங்களின் ஊடாகவே வந்து சேர்கிறது. அவை சரக்குக் கப்பல்களின் கொள்கலன்களுக்குள் வரும் பொருட்களுடன் மறைத்துக் கொண்டுவரப்படுகின்றன. சில சமயங்களில் கப்பல்களின் நீருக்குக் கீழிருக்கும் பாகங்களில் இரகசிய அறைகள் செய்து அவற்றினுள் மறைத்துவைக்கப்பட்டுக் கடத்தப்படுகின்றது. 

2021 ம் ஆண்டில் சுங்கப்படையினரால் சுமார் 70 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அது அதற்கு முந்தைய வருடத்தில் கைப்பற்றப்பட்டதை விட 74 % அதிகமானது என்று குறிப்பிடும் ஷிரிங்கா, “வாங்குபவர்கள் இருக்கும்வரை விற்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். கொள்வனவு செய்பவர்கள் அதிகமாகியிருகிறார்கள் என்றே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்,” என்று விசனத்துடன் குறிப்பிடுகிறார். 2022 இல் கைப்பற்றப்படப்போவது மேலும் அதிகமாக இருக்கும் என்று ஒத்துக்கொள்ளும் சுங்க இலாகாவினர் அதை நிறுத்தத் தம்மிடம் தீர்வு எதுவும் இல்லையென்று வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள்.

ரொட்டர்டாம் நகர நிர்வாகம் துறைமுகத்தினூடாக அங்கே வந்து கொட்டும் போதைப்பொருட்களாலும் அதைச் சுற்றியிருக்கும் வன்முறை, விபச்சாரம், சமூகக் சீரளிவு உட்பட்ட பெருமளவு குற்றங்களால் திணறிக்கொண்டிருக்கிறது. எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் அவை குறைவதாகத் தெரியவில்லை. 

துறைமுகத்துக்குத் தென்னமெரிக்காவிலிருந்து வரும் ஒவ்வொரு சரக்குக் கப்பலையும் முழுசாக ஆராயவேண்டும் என்கிறார் ரொட்டர்டாம் நகரத் தலைவர் அஹமத் அப்துதலீப். சுங்க உயர் நிர்வாகி ஷிரிங்காவோ, “நாம் கப்பல்களை நிறுத்தி ஆராய்வது கப்பல்களிலிருக்கும் பொருட்கள் வெளியே வந்து தேவையான இடங்களுக்குப் போவதற்கு இடையூறாகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்கிறார். 

துறைமுகத்துக்கு வரும் கப்பல்களிலிருந்து போதைப்பொருட்களை வெளியே கொண்டுவருவதில் சில சுங்கத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். அவ்வதிகாரிகளுக்கு ஒரு லட்சம் எவ்ரோக்கள் வரை லஞ்சம் கொடுக்கப்படுவதாக ஷிரிங்கா குறிப்பிடுகிறார். அவர்கள் மூலம் வெளியே போதைப்பொருட்கள் வருவதை எதிர்பார்த்து நாட்கணக்கில் கடத்தல்காரர்களிடம் வேலைசெய்யும் வறிய இளைஞர்கள் இருண்ட இரும்பு அறைகளில் துறைமுகத்துக்கு வெளியே ஒளித்து வாழ்கிறார்கள். அவைகளை அவர்கள் அடுத்ததாக ஐரோப்பாவெங்கும் வினியோகம் செய்கிறார்கள். 

சமீபத்தில் போதைமருந்துக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக ஒரு சுங்க அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவ்வருடத்தில் மட்டும் சுமார் 70 பேர் போதைமருந்துக் கடத்தல் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *