ராப் (Rap)இசைக்கலைஞரின் தூக்குத்தண்டனையை மறுபரிசீலனை செய்ய ஈரான் உச்ச நீதிமன்றம் முடிவு.
ஈரானிய இளம் பெண்ணொருவர் சரியான முறையில் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்று கைதுசெய்யப்பட்டுக் காவலில் இறந்துபோனதால் வெடித்த போராட்டத்தை அரசு தொடர்ந்தும் தனது கடுமையான நடவடிக்கைகளால் அடக்க முயன்று வருகிறது. போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த அரசு இதுவரை இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. அதே தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சமான் செய்தி யசீன் என்ற இசைக்கலைஞருக்கான மரண தண்டனையை மீள்விசாரணை செய்ய நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறது.
குர்தீஷ் இனத்தவரான யசீன் சமூக அநீதிகள், அரச அடக்குமுறை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவைகள் பற்றி ராப் பாடல்கள் பாடுகிறவர். அவர் மீது குப்பைப்பெட்டிக்குத் தீவைத்தது, பொலீசாரைத் தாக்கிக் கொல்ல முயற்சித்தது, வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அக்குற்றங்களை யசீன் மறுத்திருக்கிறார். கடந்த வாரம் அவரது தாயார் மகனின் மரண தண்டனை பற்றிய வேதனையில் வேண்டுதலொன்றை வீடியோச் செய்திகாக வெளியிட்டிருந்தார்.
ஈரானிய நீதியமைச்சு அறிக்கையொன்று யசீனின் வழக்கையும், மேலுமொரு மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் வழக்கையும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தது. சிறுது நேரத்தின் பின்னர் யசீனின் வழக்கை மட்டுமே விசாரிக்க இருப்பதாகவும் முஹம்மது கபாத்லூ என்ற மற்ற இளைஞரின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தனது செய்தியை மாற்றிக்கொண்டது.
கபாத்லூ ஒரு பொலீஸ் உத்தியோகத்தவரைக் கொன்றதாகவும், மேலும் ஐந்து பேரைக் காயப்படுத்தியதாகவும் நீதிமன்றத்தின் சார்பில் குறிப்பிடப்படுகிறது. நடந்துவரும் போராட்டங்களில் 69 சிறார்கள் உட்பட 506 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் அமைப்புக் குறிப்பிடுகிறது. பொலீசார் உட்பட 200 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அரச செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.
23 வயதான மோஷன் ஷெக்காரி, அதே வயதுள்ள மஜீத் ரெசா ரெஹ்னவார்ட் ஆகிய இருவர் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டவர்களாகும். மஹான் சத்ராத் என்ற இன்னொருவருடைய மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 26 பேரை மரண தண்டனைக்கு அனுப்ப அரசு நீதிமன்றத்திடம் கோருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்