சாம்பியாவில் மரண தண்டனைகளுக்கு முற்றுப்புள்ளி, ஜனாதிபதியை விமர்சிக்கவும் அனுமதி.
கடந்த வருடம் சாம்பியாவில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி ஹக்கைண்டே ஹிச்சிலேமா தனது தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறார். நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தப்படுகிறது, இனிமேல் பொதுமக்கள் ஜனாதிபதியை விமர்சிப்பதும் அனுமதிக்கப்படும். மே மாதத்தில் ஆபிரிக்க ஒற்றுமையைக் கொண்டாடும் தினத்தில் ஹிச்சிலேமா தனது திட்டத்தை அறிவித்திருந்தார். அத்திட்டம் தற்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் ஹிச்சிலேமாவின் நகர்வுகள் பாராட்டப்படுகின்றன. கிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் கடந்த வருடம் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டையாகி 33 பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. சாம்பியச் சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள். 1997 க்குப் பின்னர் அந்த நாட்டில் எவருடைய மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதியை விமர்சிக்கலாகாது என்ற சட்டமானது நாட்டின் கருத்துரிமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அது பாவிக்கப்பட்டு வந்தது. 2015 – 2021 வரையான காலத்தில் சர்வாதிகாரத்துடன் ஆளப்பட்ட சாம்பியாவில் 2021 இல் நடந்த தேர்தலில் மக்கள் நிறுவனத்தலைவராக இருந்துவந்த ஹிச்சிலேமாவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பல தடவைகள் சிறைக்கனுப்பப்பட்ட ஹிச்சிலேமா நாட்டின் லஞ்ச ஊழல்களை ஒழித்துக்கட்டிப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்