சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட நோர்வேயின் கப்பல் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது.
2021 இல் நடந்ததை நினைவூட்டுவது போல சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட ஒரு சரக்குக் கப்பல் மீண்டு தனது பயணத்தைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. நோர்வேயின் கப்பலான MV Glory சோளத்தை உக்ரேனிலிருந்து சீனாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும்போதே சுயஸ் கால்வாய்ப் பகுதியிலிருக்கும் கந்தாரா நகரருகில் கரையில் முட்டியதால் மாட்டிக்கொண்டது.
உலகின் மிகவும் அதிக போக்குவரத்தைக் கொண்ட கடல் பாதையான சுயஸ் கால்வாய் தடுக்கப்படும்போது அது உலகப் பொருளாதாரத்தை நீண்ட காலத்துக்குப் பாதிக்கும் என்பதை 2021 ம் ஆண்டு அப்பாதை முடக்கப்பட்டபோது அறிந்துகொண்ட வர்த்தக வட்டாரங்களில் இக்கப்பல் முடக்கமும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியதில் ஆச்சரியமில்லை. ஞாயிறன்று எகிப்தின் பிராந்தியங்களில் ஏற்பட்டிருந்த கடுமையான காலநிலையே அக்கப்பல் கரையில் முட்டியதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
அந்தக் கப்பலை விரைவாகவே மீட்புப் படையினர் பிரச்சினையிலிருந்து விடுவித்ததாகவும் அதையடுத்துப் போக்குவரத்து மீண்டும் சுயஸ் கால்வாயில் தொடருவதாகவும் எகிப்திய செய்திகள் விபரிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்