ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் ரஷ்ய உளவாளியாக சுவிற்சலாந்தில் செயற்பட்டார்.
ரஷ்ய ஜனாதிபதி புத்தினுக்கு நெருக்கமானவரும், ஆதரவாளருமான ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் சோவியத் யூனியனின் உளவு அமைப்பான கே.ஜி.பி இன் உளவாளியாக அங்கே செயற்பட்டுவந்தார் என்று சுவிஸ் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
சுவிற்சலாந்திலிருக்கும் பொலீஸ் இரகசிய ஆவணங்களிலிருந்து அவ்விபரங்களைத் தாம் பெற்றதாக அந்த ஊடக நிறுவனம் குறிப்பிடுகிறது. Monsignor Kirill என்ற பெயரில் அவரது செயலாற்றங்களைப் பற்றி சுவிஸ் தேசிய ஆவணங்களில் காணக்கிடைப்பதாகவும் விபரிக்கப்படுகிறது. தனது திருச்சபையின் பிரதிநிதியாகவும், சர்வதேச திருச்சபைகள் சங்கத்தின் பிரதிநிதியாகவும் 1970 களில் கிரில் சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்தார்.
சர்வதேச திருச்சபைகள் சங்கத்தினரிடையே ஏற்கனவே ஊடுருவியிருந்த ரஷ்ய உளவு அமைப்பினர் அவ்வமைப்பின் முடிவுகளைத் தமக்காதரவானதாக மாற்றுவதற்காகக் கிரில் மூலம் முயற்சித்து வந்தார்கள். மியாய்லோவ் என்ற சங்கேதப் பெயரை அதற்காகக் கிரில் பயன்படுத்தி வந்தார் என்று ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
வெளியாகியிருக்கும் விபரங்களைப் பற்றி எதையும் சொல்ல ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபை மறுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்