பழசாகிவிட்ட விமானம்தாங்கும் இராணுவக்கப்பலொன்றைக் கடலுக்குள் மூழ்கவைத்தது பிரேசில்.
அறுபது வயதைத் தாண்டிவிட்ட Sao Paulo என்ற பெயருடைய விமானங்களைத் தாங்கக்கூடிய தனது போர்க்கப்பலொன்றை பிரேசில் இராணுவம் திட்டமிட்டுக் கடலுக்குள் மூழ்கடித்திருக்கிறது. பெருமளவில் வெவ்வேறு விதமான நச்சுப்பொருட்களைக் கொண்ட அந்தப் போர்க்கப்பலை மூழ்கடித்து அரசே கடலைக் குப்பைமேடாக்குவதாகப் பல சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருக்கின்றன.
Sao Paulo போர்க்கப்பலை ஏதாவது ஒரு துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லவே பிரேசில் முயற்சி செய்தது. ஒரு வழியாக துருக்கிய நிறுவனமொன்று அக்கப்பலைத் துருக்கியத் துறைமுகமொன்றுக்குக் கொண்டுசெல்லக் கடந்த வருடம் தயாராகியது. குறுக்கே நுழைந்த துருக்கிய அதிகாரம் அந்தக் கப்பலை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றுவதற்காகப் பாவிக்கப்படும் இடத்தைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சூழல் மாசுபாட்டைக் காரணம் காட்டி அதை மறுத்துவிட்டது. வெவ்வேறு நச்சுப்பொருட்களைப் பல்லாயிரம் தொன் அளவில் கொண்டிருக்கும் போர்க்கப்பலை எந்தத் துறைமுகமும் ஏற்கத் தயாரில்லாத நிலையில் அக்கப்பலைக் கடலுக்குள்ளேயே சமாதியடையவைக்கும் முடிவை பிரேசில் எடுத்தது.
அத்லாந்திக் சமுத்திரத்தில், பிரேசில் கடற்கலையிலிருந்து சுமார் 350 கி.மீ தூரத்தில் சுமார் 5,000 மீற்றர் ஆழமுள்ள இடமொன்றில் கப்பலை மூழ்கடித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மனித உணவுக்காகப் பாவிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களுக்கு அது ஆபத்தானது என்று சுற்றுப்புற சூழல் மேம்பாட்டுக்காகப் போராடும் அமைப்புக்கள் பிரேசில் அரசைக் கண்டித்திருக்கின்றன.
குறிப்பிட்ட போர்க்கப்பலானது 1950 களில் பிரான்ஸ் நிறுவனமொன்றால் கட்டப்பட்டு 37 ஆண்டுகள் பிரெஞ்ச் கடற்படையின் கைவசம் Foch என்ற பெயருடன் பாவிக்கப்பட்டு வந்தது. இக்கப்பல் 1960 களில் பிரான்ஸ் அணு ஆயுதப் பரிசோதனைகளைப் பசுபிக் கடற்பிராந்தியத்தில் நடத்தியபோது பாவித்தது. அதன் பின்னர் 1990 வரை மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் யூகோஸ்லாவியா பகுதிகளில் பிரான்ஸ் அக்கப்பலைப் பாவித்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்