“பச்சை நிறச்சட்டையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்யும் முன்னாள் நகைச்சுவை நடிகர்,” நையாண்டி செய்கிறது ரஷ்யா.
ரஷ்யா உக்ரேனுக்குள் படையை அனுப்பிப் போரை ஆரம்பித்த சமயத்தில் தன் உயிருக்கு ஆபத்து என்று தினசரி குறிப்பிட்ட உக்ரேன் ஜனாதிபதி சமீப காலத்தில் சில வெளிநாட்டுப் பயணங்கள் செய்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்னறிவுப்புச் செய்யாமல் புதனன்று லண்டனில் வந்திறங்கிய அவர் அன்றிரவே பாரிஸ் சென்று அடுத்து பிரசல்ஸ் நோக்கித் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
சில வாரங்களுக்கு முன்னர் தான் உக்ரேன் நீண்ட காலமாகக் கேட்டுவந்த கவச போர் வாகனங்களை ஜேர்மனி, அமெரிக்கா, சுவீடன், நோர்வே, போலந்து ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டது. அதையடுத்து, வான்வெளியிலும் போரைத் தொடர்ந்து விரைவில் ரஷ்யாவை வெல்ல, தமக்குப் போர்விமானங்கள் தேவை என்று கோரி வருகிறார் ஜனாதிபதி செலென்ஸ்கி.
செலென்ஸ்கியின் சுற்றுப்பயணத்தைக் கேலிசெய்கிறது ரஷ்யா. “மனித உரிமைகள், சுதந்திரம் போன்றவை பற்றிய செலென்ஸ்கியின் பிரமாண்டமான விளக்கங்களும் அவைக்காக அவர்கள் போரில் ஈடுபட்டு வருவதாகப் பிரலாபிப்பதும் இரட்டைத்தனங்களே. பச்சை நிறச்சட்டையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்யும் முன்னாள் நகைச்சுவை நடிகர் தான் அவர். அவர் கேட்பது போன்ற போர்விமானங்கள் அவர்களுக்குக் கிடைத்தாலும் கூட விளைவு போர் மேலும் பரவுவதும், இறப்புக்களை அதிகரிப்பதும் ஆகத்தானிருக்குமென்பதை பிரிட்டர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். எங்கள் நாட்டுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களை எப்படி எதிர்கொள்ளவேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்,” என்கிறது ஐக்கிய ராச்சியத்துக்கான ரஷ்யத் தூதராலயம்.
சாள்ஸ் ஜெ. போமன்