இஸ்ராயேலைச் சேர்ந்த இணைய ஊடுருவிகள் உலகெங்கும் 30 தேர்தல்களைத் திசைதிருப்பியிருக்கிறார்கள்.
சர்வதேச ஊடகமான கார்டியனைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ஆராய்விலிருந்து வெளியாகியிருக்கும் விபரங்கள் இஸ்ராயேலைச் சேர்ந்த இணையத்தள ஊடுருவல் குழுவொன்று உலகெங்கும் நடந்த 30 தேர்தல்களில் தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள் என்கின்றன. குறிப்பிட்ட பகுதியாரின் விருப்பத்துக்கிணங்க Demomam International என்ற நிறுவனம் தேர்தல் சமயத்தில் அரசியல் கருத்துக்களைத் திசைதிருப்புவதில் செயல்பட்டிருக்கிறது.
இணையத்தள ஊடுருவல் குழுவான Demomam International இன் நிறுவனர் இஸ்ராயேல் உளவுத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய தல் ஹனான் என்பவராகும். தேர்தல்களில் ஊடுருவும் துறையில் அந்த நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகிறது. “Team Jorge” என்ற சங்கேதப் பெயரில் அந்தக் குழுவினர் தேர்தல்களில் தமது கைவரிசையைக் காட்டி வந்திருக்கிறார்கள்.
இஸ்ராயேலைத் தளமாகக் கொண்டு செயற்படும் இணைய ஊடுருவல் குழுவினர் சமூகவலைத்தளங்களையே தமது செயற்பாட்டுக்கான முக்கிய கருவியாகப் பாவித்திருக்கிறார்கள். முக்கியமாக டுவிட்டர் அவர்களால் பெருமளவில் பாவிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பொய்யான கணக்குகளை @Canaelan என்ற ஒரு விலாசம் மூலம் உபயோகித்ததைப் பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
Demomam International அமைப்பின் விபரங்கள், அவர்களிடம் 30,000 க்கும் அதிகமான பொய்யான கணக்குகள் சமூகவலைத்தளங்களில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. அவைகள் மூலம் பொய்ச்செய்திகள், திரிவுபடுத்தப்பட்ட செய்திகள், குறிவைத்து நபரைத் தாக்குதல், ஆதரித்தல் போன்றவைகளுக்காக அவை பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, தென்கிழக்காசியப் பிராந்திய நாடுகளில் Demomam International நிறுவனத்தின் சேவைகள் பாவிக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்