அல்-கைதாவின் புதிய தலைவர் எகிப்திய இராணுவத் தளபதியாக இருந்த சாயிப் அல் – ஆடில் என்கிறது ஐ.நா-அறிக்கை.

அல்-கைதாவை ஆரம்பித்த ஒசாமா பின் லாடினுக்குப் பின்னர் அவ்வியக்கத்தின் தலைமையை ஏற்ற அய்மான் அல் ஸவாஹிரி 2022 இல் அமெரிக்கர்களால் குறிவைத்துக் கொல்லப்பட்டார். ஸ்வாஹிரியைப் போலவே எகிப்திலிருந்து அமைப்பில் சேர்ந்த சாயிப் அல்-ஆடில் அதையடுத்து அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் குறிப்பிட்டிருக்கின்றன.

எகிப்திய அரசின் பிரத்தியேக அதிரடிப்படையின் தளபதிகளில் ஒருவராகச் செயற்பட்டு வந்த அல் – ஆடில் 62 வயதானவர். தற்போது ஈரானிலிருந்து அவர் செயற்பட்டு வருவதாக அமெரிக்காவின் உளவு அமைப்பு அறிக்கை குறிப்பிடுகிறது. அல்-கைதாவின் தலைவரை அமீர் என்று அந்த அமைப்பு பிரகடனம் செய்வதுண்டு. அல்-ஆடில் இதுவரை அந்தப் பட்டத்தைப் பெறவில்லை. அதற்கான காரணம் ஆப்கானிஸ்தானில் அல் -ஸவாஹிரி ஒளிந்து வாழ்ந்ததையோ, கொல்லப்பட்டதையோ அந்த நாட்டையாளும் தலிபான் தலைமை இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை என்பதாகும்.  

இஸ்லாத்தின் சுன்னி மார்க்கத்தையே உண்மையான பாதையாகக் கருதிச் செயற்படும் அமைப்பு அல்-கைதா அம்மார்க்கத்தின் எதிரிகளாகக் கருதப்படும் ஷீயா மார்க்கத்தினரால் ஆளப்படும் ஈரானில் வாழ்வது அவ்வியக்கத்துக்கு ஒரு உறுத்தலான விடயமாகும். நீண்டகால அல்-கைதா இயக்கத்தினரான அல் – ஆடில் 2002 – 2003 காலகட்டத்தில் ஈரானில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் விடுவிக்கப்பட்டுப் பாகிஸ்தானுக்கு அடிக்கடி விஜயம் செய்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *