ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டிலிருந்து இஸ்ராயேலின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டனர்.
எத்தியோப்பியாவின் தலை நகரான அடிஸ் அபாபாவில் வெள்ளியன்று தொடங்கிய ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாடு- ஞாயிறு வரை தொடரவிருக்கிறது. ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கத்துவராக இல்லாவிட்டாலும் அதன் கூட்டங்களில் ஒரு பார்வையாளராகக் கலந்துகொள்ளும் அந்தஸ்து பெற்ற நாடு இஸ்ராயேல். மாநாடு வெள்ளியன்று ஆரம்பமாக முன்னர் அந்த மண்டபத்திற்குப் பங்குகொள்ள வந்திருந்த இஸ்ராயேல் அரசின் பிரதிநிதிகளை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.
ஆபிரிக்க ஒன்றிய அங்கத்துவர்களான தென்னாபிரிக்கா, அல்ஜீரியா ஆகிய நாடுகளே இஸ்ராயேலை அதிரடியாக மாநாட்டிலிருந்து வெளியேற்றக் காரணமாக இருந்தவர்கள் என்று தெரியவந்ததாக இஸ்ராயேல் அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.
“ஆபிரிக்க ஒன்றியத்தின் தீவிரவாத நாடுகளான தென்னாபிரிக்கா, அல்ஜீரியா ஆகியவையே எங்களைப் பணயக் கைதிகள் போன்று கைப்பற்றி வெளியேற்றியிருக்கின்றன. வெறுப்பால் உந்தப்பட்ட ஈரானால் கட்டுப்படுத்தப்பட்ட அவர்களுடைய செயல்களைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. ஆபிரிக்க ஒன்றிய அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணையும்படி ஆப்பிரிக்க நாடுகளை நாங்கள் அழைக்கிறோம்,” என்று குறிப்பிட்டிருக்கும் இஸ்ராயேல் நடந்ததைத் தாம் மிகவும் தீவிரமாகக் கருதுவதாகத் தெரிவித்தது.
ஆபிரிக்க நாடுகளனைத்துடனும் ராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடு இஸ்ராயேல். 2002 வரை ஆபிரிக்க ஒன்றியத்தில் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டிருந்த இஸ்ராயேல் அன்றைய லிபியத் தலைவர் கடாபியின் விருப்பத்துக்காக அதை இழந்தது. மீண்டும் 2021 இல் அந்த அந்தஸ்தை இஸ்ராயேல் பெற்றது. மாநாட்டிலிருந்து வெளியேற்றியது தமது நடவடிக்கையல்ல என்று குறிப்பிட்ட தென்னாபிரிக்கா பார்வையாளர் அந்தஸ்து பற்றிய முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்கிறது. ஆபிரிக்க ஒன்றியத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம், இஸ்ராயேல் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்க வந்தவர் ஏற்கனவே நிச்சயப்படுத்தப்பட்டவர் அல்ல என்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்