“ரஷ்யாவுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்திவிடாதீர்கள்,” என்கிறார் ஹங்கேரியப் பிரதமர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலும், நாட்டோ அமைப்பிலும் அங்கத்துவராக இருந்தும் ரஷ்யாவுடனான தனது நாட்டின் வர்த்தக உறவுகளை வெட்டிக்கொள்ள மறுத்து வருபவர் ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஒர்பான் ஆகும். “ஐரோப்பா, ஹங்கேரி ஆகியவையின் பாதுகாப்புக்கு ரஷ்யா ஒரு ஆபத்து என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே ரஷ்யாவுடனான எங்கள் வர்த்தகத் தொடர்புகளை முறித்துக்கொள்ள மாட்டோம். அதையே எங்கள் நட்பு நாடுகளும் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று விக்டர் ஒர்பான் தனது நாட்டு மக்களுக்கான வருடாந்தர உரையில் தெரிவித்தார்.
“போரொன்றுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது ஐரோப்பா. உண்மையில் ரஷ்யாவுடனான மறைமுகமான போரில் ஐரோப்பா ஏற்கனவே ஈடுபட்டிருக்கிறது. எங்களுடைய முக்கிய வழி போரில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொள்வதே. நாட்டோவும், ஐரோப்பிய ஒன்றியமும் போரில் ஈடுபட்டிருக்கும்போது அவைகளில் அங்கத்துவராக இருந்துகொண்டு அப்போரை ஒதுக்குவது இலகுவாக இல்லை. நடக்கும் போர் காட்டுமிராண்டித்தனமாகவும், மிருகத்தனமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது,” என்று மேலும் ஒர்பான் தனது உரையில் கூறினார்.
பிரதமர் ஒர்பான் புத்தினுடன் நெருங்கிய உறவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறார். உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்த அவர் புத்தினை இதுவரை நேரடியாகக் கண்டிக்கத் தயாராக இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உக்ரேனுக்கு எவ்வித ஆயுதங்களையும் அனுப்ப மறுத்து வருகிறது ஹங்கேரி. மேற்கு நாடுகள் ஒன்றிணைந்து சமாதானத்துக்கான வழிகளெல்லாவற்றையும் மூடிக்கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார் ஒர்பான்.
சாள்ஸ் ஜெ. போமன்