“பணயக்கைதியைப் பிடிக்கக் காரணம் உணவோ, நீரோ வேண்டியல்ல, எங்கள் சுதந்திரத்தை அங்கீகரியுங்கள்!”
மேற்கு பாபுவாவில் தமது சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஆயுதம் தாங்கிய குழுவினர் தாம் கைப்பற்றிய நியூசிலாந்து விமானியின் படத்தையும் தமது கோரிக்கையையும் சமூகவலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தோனேசியா தம்மைத் தாக்காதவரை பணயக்கைதி சுகமாகவே இருப்பார் என்கிறார் போராளிகளின் பேச்சாளர் செபி சம்பூம். “நான் அவரைப் பணயக்கைதியாகக் கைப்பற்றக் காரணம் எங்கள் சுதந்திரமே தவிர எங்களுக்கு உணவும், நீரும் வேண்டுமென்றதாலல்ல,” என்கிறார் போராளிகளின் தலைவர் எகியானுஸ் கோகாயா.
பாபுவாவின் மலையடர்ந்த பகுதியிலிருந்த விமான நிலையத்தில் ஐந்து பாபுவா பயணிகளை இறக்கச்சென்ற விமானம் இறங்கி, பயணிகள் வெளியேறியதும் நியூசிலாந்து விமானியான பிலிப் மெஹ்ர்டென்ஸ் விடுதலைப் போராளிகளால் கடத்தப்பட்டார்.
நியூசிலாந்து அரசு தற்போதைய நிலையில் தமது குடிமகனின் நிலையைப் பற்றி எதையும் குறிப்பிட விரும்பவில்லை. இந்தோனேசிய அரசு அரசு தாம் தொடர்ந்தும் மேற்கு பாபுவா விடுதலைப் போராளிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையைச் சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்