மாதங்களில் பாவையவள்..!

சித்திரைமாத நிலவவள் என்
சிந்தை மயக்கும் ஔியவள்
சிறுநெருஞ்சி பூவாயவள் என்தேகம் சிலிர்த்திட மலர்வாயவள்

வைகாசி வைகறையில் வானலையில் பூக்கின்ற முல்லையவள் என்வாலிப நெஞ்சமதை வளைப்பவள்

ஆனிமஞ்சணத்தில் மாங்கனிகளின் ரசமெடுத்து குவளைமலர் கொவ்வாயில் கொணர்கின்றவள்

ஆடி தேரோட்டமாய் பூவின் பரிவட்டமாய் பூத்துகுலுங்கும் நந்தவன பூந்தோட்டமவள்

ஆவணி காற்றிலே தாவணி மெல்லசையை தளிர்மேனி சிலிர்த்திட சிற்றிடை நோவாதோ

புரட்டாசி….புரண்டோடும் வெள்ளமதில் மிதந்தாடும் மீனினமாய் உனதிருவிழி என்னில் துள்ளுவதேனோ

ஐப்பசி திங்களில் கவிப்பேசி கூதலிசைத்து கருக்குடத்தில் எனை உயிராட்டுபவள்

கார்த்திகை காரிருளில் அண்ணாமலை தீபமாய் சொர்க்கவாசல் திறவுகின்ற ஔிப்பேழையவள்

மார்கழி மாச பனியிலே உந்தன் மாந்தளிர் மேனியும் குறுகாதோ மாவிலை பூவின் முகமதிலே வாடைக்காற்றினால் கருகாதோ

தைமாத நெய்மழையில் தீபமேற்றிட வரம்கேட்டு முந்தானை சேலையாலே மூடிவைத்து காத்திருப்பவள்

மாசிமாத இளம்காற்றில் இடையாடை உதிர்ந்தாட பழுத்தாடும் பலநினைவு குருத்தாடை இடையேற குறுகுறுக்கும் மடியோரம்

பங்குனி உத்தரம் தலைமீது செங்கதிர் சூடும் விழுந்தாட அகம்குளிர நீ வாராய் அம்பென எய்திடும் அகமழையை ஏற்றிடாயோ…என் பேரின்ப பெண்ணே…
ஆக்கம்
ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *