அச்சுறுத்தும் நிபா வைரஸ்..!

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் 10 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை, சுகாதார துறைக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

நேற்று இறந்த இரண்டு நபர்களின் மருத்துவ பரிசோதனை வெளியானது, அதில் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்துனரை தனி வார்ட்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.

தமிழ்நாடு எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு:

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு பரவி வரும் நிலையில் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்த பொது சுகாதார துறை இயக்குனர், மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என உடல்நல பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அறிகுறிகள் என்ன?

நிபா வைரஸின் அறிகுறிகள் பொதுவாக 4-14 நாட்களுக்குள் தோன்றும். சுவாச பிரச்சனைகள், காய்ச்சல், தலைவரி, இருமல், வாந்தி, மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் வலிப்பு கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபா தொற்று நோயாளிகளின் இறப்பு 40 சதவீத முதல் 75 சதவீதம் வரை உள்ளது.

நிபா வைரஸ்:

தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் (NiV) பாதிப்பானது கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 2018 ஆண்டு பதிவாகியது. நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர் உட்பட சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக அதிகபடியான இறப்புகள் பதிவானது. 2021 ஆம் ஆண்டில், 12 வயது சிறுவன் ஒருவன் வைரஸால் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு (WHO) படி, நிபா வைரஸ் தொற்று ஒரு ஜூனோடிக் நோய். இது விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவுகிறது என்றும், அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடியாக நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு கண்டறிய பட்டவர்களிடம் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளையழற்சி வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிபா வைரஸ் இறப்பு விகிதம் சுமார் 70 சதவிகிதம் ஆகும். இதுவரை இந்த வைரஸுக்கு தடுப்பூசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உஷா வரதராஜன்.
பெங்களூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *