வெற்றி களிப்பில் ….!

ரயில் பயணம்

புன்னகை புகை பூக்க
விரைகிறது புகைவண்டி
பாவம் பக்கத்துவீடுகள்…
பரவாயில்லை காட்டுமரங்கள்…
தலைவருடும் காற்றில்
கரைந்தே தொலைகிறது
காணிக்கையாக்கிய இரவுகள்.

எதிரே இன்பராசா
இடப்பக்கம் இன்னுமிருவர்
மொத்தமாய் மூவரையும்
முழுதாய் விழுங்கிய வெற்றிக் களிப்பில்
இரவுக்கு வயது பத்துமணி

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காரிருளின் கைவரிசை
மனதுக்கெட்டிய தூரம்வரை
மாய்த்திருக்கும் மனப்பதிவுகளை
கோத்தெடுக்கும் முயர்ச்சியில் நான்…..

ஏங்கிருந்தோ ஓர் உந்துருளி….
எங்கே போய் சேருமென்ற
வினா முடிவதற்குள்….
முடிந்து போகிறது
என் பார்வைக் கோணம்

தானொருவன் இருப்பதை
தலையசைப்பு மட்டுமின்றி
சத்தமிட்டும் சுட்டிக் கொண்டிருக்கும்
மின்விசிறியும் என்னையும் தவிர
அனைவருமே
இரவுக் கள்ளனால்
கொள்ளையிடப்பட்டிருந்தனர்.

மன்னம்பிட்டி
மறையும்போது
நள்ளிரவுக்கின்னும்
நாற்பது நிமிடங்கள்

சில்லென்ற குளிர்காற்று
ஜன்னலூடு சொல்லியது
கார்காலக் கதவுகள்
திறந்தே கிடப்பதை

என்னுடன் விழித்திருந்த விழிகள்
முணகிக் கொண்டன
போதும் கவிதை
போர்த்திக்கொண்டு தூங்கென
பாவம் மின்விசிறி
தனிமையில் தவித்திருக்கும்.

உஷா வரதராஜன்.

பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *