இதில் நீங்கள் பயணித்ததுண்டா?
காட்சியும் நானே கவிதையும் நானே
தள்ளி நிறுத்தி..
‘குரங்குப் பெடல்’ போட்டு..
தண்டில் ஏறி கால் எட்டியதும்..
தலை கோதி கைவிட்டுஓட்டி..
நண்பர்கள் ஐவரையும் ஒன்றாய் சுமந்து
சினிமாவுக்கு போனதும்..
நடந்து சென்ற காதலிக்கு
வலுக்கட்டாய ‘லிப்ட்’ கொடுத்து
சொல்லாத காதலை
சொல்லிடாமலே போனதும்!
சோகங்களைப் பாடியபடி
இறக்கங்களைக் கடந்ததும்!
மனைவியோடு மகள்களையும்
சுகமாக சுமந்ததும்..
சொத்து சொந்தம் அத்தனையும்
விட்டுவிட்டு போனபோதும்..
சீதனத்து ஞாபகமாய்
சிக்கனத்தின் வாகனமாய்…
ஏழை என்னை கரைசேர்க்க எப்போதும்
உடனிருந்தாய்..
காலங்கள் செல்லச்செல்ல..
வாழ்க்கை நிலை மாறமாற..
‘காரு, பைக்’கு
‘கரண்டு ஸ்கூட்டர்’
ஆளுக்கொன்னு வாங்கிவிட்டோம்..
உடற்பயிற்சிக்காக மட்டும்
அப்பப்ப உன்ன மிதிச்சிகிட்டோம்…
வேலை நேரம் அதிகமாக..
மூலையில நிறுத்தி வெச்சேன்…
துடைக்கக்கூட நானுமில்ல..
ஓட்டிநகத்த யாருமில்ல..
தூசு படிஞ்ச உருவந்தோட
ஓரத்துல நிக்கிறியே!
வாடக வீட்டுக்குள்ள
நிறுத்தி வெக்க இடமும் இல்ல
வாங்கவும் யாரும் வல்ல..
‘எடைக்கிப்போட்டு’
ஒடச்சிப்போட
என் மனசு கல்லுமில்ல!
சின்னஞ்சிறு வயசுதொட்டு
என்னோட நீ இருந்த..
‘அக்னி’ யின்னு பேருவெச்சு
‘அண்ணனெ’ன நான் நெனச்சேன்
‘நண்பா’ உன் சரித்திரத்த
நெஞ்சுக்குள் நிறுத்தி வெச்சேன்..
‘ஒ எல் எக்ஸ்’ ‘குயிக்கருல’
உனக்கு என்ன வெலைய வெக்க..?
விலை மதிப்பே இல்லாத
பொக்கிஷம்தான் நீ எனக்கு…
பழைய இரும்பு வடிவமான
‘சைக்கிள்’ நீ உலகத்துக்கு!
‘ பழைய சைக்கிள்’ நீ உலகத்துக்கு!! *வீரா*