டமஸ்கஸ் தாக்குதல் | மத்திய கிழக்கில் திறக்கும் மற்றுமொரு போர் முனை?
எழுதுவது சுவிசிலிருந்து சண் தவராஜா
சிரியத் தலைநகர் டமஸ்கஸில் அமைந்திருந்த ஈரான் தூதரகப் பணிமனை மீது விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அதனைத் தரைமட்டமாக ஆக்கியிருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர ஆயுதப் படையின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதப் படையின் பன்னாட்டுப் பிரிவின் ஆலோசகரான ஜெனரல் மொகமட் ரெஸா சஹடி, அவரின் உதவியாளர் ஜெனரல் மொகமட் ஹாடி ஹாஜி ரஹிமி, படைத் தலைமை அதிகாரி ஜெனரல் ஹு சைன் அமிரொல்லா உட்பட எழுவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளை, இந்தத் தாக்குதலில் தூதரக அதிகாரிகள் உட்பட மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டதாக லண்டனைத் தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொள்வது இதுவொன்றும் முதன்முறை அல்ல. ஆனால், ஒரு தூதரகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதல் முறையாகும். ஒரு நாட்டின் தூதரகம் உலகின் எந்த மூலையில் அமைந்திருந்தாலும் பன்னாட்டுச் சட்டங்களின் படி அது அந்த நாட்டின் சொந்த மண்ணாகவே கருதப்படுவது நடைமுறை. அந்த அடிப்படையில் குறித்த தாக்குதல் ஈரான் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதலாகவே கொள்ளப்பட வேண்டும்.
இத்தகைய ஒரு தாக்குதலின் விளைவு என்னவாக அமையும் என்பதைத் தெரிந்து கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது என்பது ஐயத்துக்கு அப்பாற்பட்டது. அது மாத்திரமன்றி தனது எசமானான அமெரிக்காவுக்கு அறிவிக்காமல் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்காது என்பதுவும் அப்பட்டமான உண்மை.
இந்தத் தாக்குதல் மூலம் இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்ப்பது என்ன?
ஈரான் ஆட்சியாளர்களையும், அதன் படைக் கட்டுமானங்களையும் மேற்குலகம் உலகின் எதிரியாகக் கருதிச் செயற்பட்டுவரும் நிலையில் இந்தக் கொலைகளை நியாயப்படுத்த அந்த நாடுகள் முயற்சிக்கலாம். ஆனால், இதற்கான பதிலடியையும் அவை எதிர்பார்த்தே ஆகவேண்டும். அவ்வாறான பதிலடியைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக் கூடும் என்பதே தற்போது நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
பலஸ்தீனத்தில் தற்போது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் அழிவுகரமான, மனதாபிமானமற்ற போரில் ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களுடன் இஸ்ரேல் மோதிய வண்ணமேயே உள்ளது. இந்நிலையில் ஈரானுடன் ஒரு நேரடி மோதலைத் தொடங்குவதற்கான முன்முயற்சியாகவே இந்தத் தாக்குதல் நோக்கப்படுகின்றது.
இஸ்ரேல் நேரடியாகவும், அமெரிக்கா மறைமுகமாகவும் வீசியுள்ள இந்தத் தூண்டிலில் ஈரான் சிக்குமா, இல்லையா என்பதை அடுத்துவரும் நாட்களில் ஈரான் மேற்கொள்ளப் போகும் பதில் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். பதில் நடவடிக்கை எதுவானாலும் அதன் விளைவு மத்திய கிழக்கில் ஒரு அபாயகரமான போருக்கே வழிவகுக்கும் என்பதே உண்மை. உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடலாம் என்ற ஐயங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் மற்றொரு போர்முனையைத் திறப்பது எந்த வகையில் புத்திசாலித் தனம் என்பது அமெரிக்க ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.
பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நடத்திவரும் போர் அந்த மண்ணின் எல்லைகளையும் கடந்து லெபனானிலும், சிரியாவிலும் ஏன் ஏமனிலும் கூட நடைபெற்று வருகின்றது என்பது இரகசியம் அல்ல. இந்த மூன்று முனைகளிலும் ஈரான் நாட்டின் ஆதரவு அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் போராட்டக் குழுக்களுக்கும் கிடைத்து வருவதும் வெளிப்படையான உண்மையே. மத்திய கிழக்கில் தனது செல்வாக்குக்குப் போட்டியாளராக ஈரான் உள்ளமையை இஸ்ரேலால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதேபோன்று அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் உலகளாவிய அடிப்படையில் ஈரான் சவாலாக இருந்து வருகின்றது. எனவே, ஈரானை எப்படியாவது சண்டைக்கு அழைத்து அதன் படைபலத்தைச் சிதைத்து, தனக்கு ஏற்ற ஒரு ஆட்சியாளரைப் பதவியில் அமர்த்தி அழகுபார்க்க அமெரிக்க துடியாய்த் துடிக்கின்றது. தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள இஸ்ரேலைப் பாவித்துக் கொள்ளும் அமெரிக்கா அந்த நாட்டுக்குத் தேவையான அனைத்து வளங்களையும் வாரி இறைக்கிறது.
டமஸ்கஸில் நடைபெற்ற தாக்குதலை சிரியா, ஈரான் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இதுவரை கண்டித்துள்ளன. ஒரு நாட்டின் தூதரகம் மீதான தாக்குதல் பன்னட்டுச் சட்டங்களுக்கு, நியமங்களுக்கு எதிரானது. ஜனநாயக விழுமியங்களைப் பேணும் அனைத்து நாடுகளாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இதுவரை அது நிகழவில்லை. காரணம் சம்பந்தப்பட்ட நாடு ஈரான், நிகழ்வு நடைபெற்ற நாடு சிரியா. உலகின் அளவீடு இந்த அடிப்படையிலேயே உள்ளது.
சிரியாவில் இஸ்ரேலியத் தாக்குதல் நிகழ்வது இதுவே முதன்முறையும் அல்ல. அதில் ஈரானிய படைத்துறை அதிகாரிகள் குறிவைக்கப்படுவதும் புதுமை அல்ல. கடந்த டிசம்பரில் டமஸ்கஸ் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற ஒரு தாக்குதலில் ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர ஆயுதப் படையின் தளபதியான ஜெனரல் ஸெயட் ராஸி மவ்சவி கொல்லப்பட்டார். அதேபோல் யனவரியில் டமஸ்கஸில் நடைபெற்ற மற்றுமொரு தாக்குதலில் படைத்துறை ஆலோசகர்கள் ஐவர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் ஈராக்கிய எல்லையோரம் உள்ள டியர் எல்-சோர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றுமொரு ஆலோசகர் கொல்லப்பட்டுள்ளார்.
இது தவிர ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா உறுப்பினர்களை இலக்கு வைத்து சிரியாவிலும், லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது. காஸாவில் போர் தொடங்கியதற்குப் பின்னான காலப்பகுதியில் 4,500 ஹிஸ்புல்லா இலக்குகள் மீது சிரியாவிலும் லெபனானிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கடந்த மாதம் இஸ்ரேலியப் படைத்துறை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய காஸா மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னிருந்தே இஸ்ரேலும் ஈரானும், அமெரிக்காவும் ஈரானும் இந்தப் பிராந்தியத்தில் மறைமுக மோதல்களில் ஈடுபட்ட வண்ணமேயே உள்ளன என்பது ஒன்றும் இரகசியமல்ல. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் மீதும் இந்தப் பிராந்தியம் முழுவதும் இஸ்ரேலும் அமெரிக்காவும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தாக்குதல்களை நடத்திய வண்ணமேயே உள்ளன. பதிலுக்கு ஆயுதக் குழுக்களும் இஸ்ரேல் மீதும் அமெரிக்க இலக்குகள் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டே இருக்கின்றன. டமஸ்கஸ் தாக்குதலுக்கு முறையான பதிலடி வழங்கப்படும் என ஈரானியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பதிலடி நேரடியானதாக இருக்குமா அல்லது வழக்கம் போன்று ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் மூலம் நிகழுமா என்பதே கேள்வி. வழக்கத்தை மீறி நேரடித் தாக்குதலில் ஈரான் இறங்குமானால் மத்திய கிழக்கில் மற்றொரு போர்முனை திறக்கப்படும் அபாயம் உருவாகும் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நன்றி வீரகேசரி