சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய உத்தரவிட்டுள்ளார்.
இன்று (08) இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி கோரினார். ஆனால், அந்த வங்கி அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 06 நிரந்தர வைப்பு கணக்குகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவந்து, அந்தப் பணத்தை எடுத்தார். இதன் காரணமாக, மாகாண சபைக்கு 17.3 மில்லியன் ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.