தவறான தீர்ப்பால் 43 வருடங்களாகச் சிறையிலிருந்த ஆபிரிக்க-அமெரிக்கர் விடுதலை செய்யப்பட்டார்.
கெவின் ஸ்டிரிக்லாண்ட் என்ற 62 வயதானவரை 43 வருடங்கள் தவறாகச் சிறையில் பூட்டியிருந்ததாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் மிசூரி மாநில நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. ஸ்டிரிக்லாண்ட் மூன்று கொலைகளைச் செய்ததாகத் தவறாகத் தண்டிக்கப்பட்டவர்.
தவறாகக் கொலைத்தண்டனைக்காகத் தண்டிக்கப்பட்டவர்களில் மிக நீண்ட காலம் சிறையிலிருந்தவர்களில் கெவின் ஸ்டிரிக்லாண்ட்டும் ஒருவர். தனது 18 வது வயதில் எந்தவித ஆதாரங்களும் இல்லாமலேயே அந்தக் கொலைகளுக்காக ஆயுள்காலத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. கொலை நடந்தபோது அங்கே இருந்ததாக ஒரு சாட்சி நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். தான் அப்படிச் சொல்வதற்குப் பொலீசாரால் கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்தச் சாட்சி பின்பு பல தடவைகள் குறிப்பிட்டிருந்தார்.
1979 இல் ஸ்டிரிக்லாண்ட்டுக்குத் தீர்ப்பளித்த நீதிபதி தனது தீர்ப்புக்கான சட்டபூர்வமான விபரங்கள் மிகவும் பலவீனமானவை என்று குறிப்பிட்டதை அடுத்தே அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் ஜுரர்கள் எல்லோரும் வெள்ளையர்களாக இருந்தார்கள்.
தற்போது சக்கர நாற்காலியில் இருக்கும் ஸ்டிரிக்லாண்ட், சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் தாயாரின் மயானத்துக்குப் போவதும், கடலைக் காண்பதும் தனது நீண்டகாலக் கனவுகள் என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்