அழிந்துவரும் இன வெள்ளைக் காண்டாமிருகங்கள் 30 ருவாண்டாவுக்கு விமானத்தில் பறந்தன.
அரை நுற்றாண்டுக்கு முன்னர் வரை ஆபிரிக்காவில் பரந்து வாழ்ந்து வந்த வெள்ளைக் காண்டாமிருகங்கள் வேட்டையாடுகிறவர்களினால் வேகமாக அழிக்கப்பட்டன. 1970 முதல் அவற்றைக் கொல்வது தடை செய்யப்பட்டது. அத்துடன் அம்மிருகங்கள் அழியாமல் பேணும் வெவ்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தென்னாபிரிக்காவில் வேட்டையாடுகிறவர்களால் தினசரி காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டு வருகின்றன. அதனால் வெள்ளைக் காண்டாமிருகங்கள் அழிந்துவிடும் அபாயம் அதிகரித்திருக்கிறது. எனவே அங்கிருந்து முப்பது வெள்ளைக் காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு விமானமொன்றில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. தென்னாபிரிக்காவிலிருந்து 3,400 கி.மீற்றர் போயிங் 747 விமானத்தில் 40 மணி நேரப் பயணத்தின் பின்பு அவை ருவாண்டாவின் [Akagera National Park] அக்ககேரா தேசிய வனத்துக்கு வந்து சேர்ந்தன. பயணத்தின்போது கலவரமடையாமலிருக்க மயக்க நிலையில் கொண்டுவரப்பட்ட அம்மிருகங்கள் அந்தத் தேசிய வனத்தில் சுதந்திரமாக நடமாக விடப்படும்.
அழிந்துவரும் வனவிலங்குகளின் இனங்கள், தாவரங்களைப் பாதுகாக்கும் 1934 இல் 2,500 சதுர கி.மீற்றர் அளவில் அக்ககேரா தேசிய வனம் ஆரம்பிக்கப்பட்டது. ருவாண்டாவில் 1990 களில் ஏற்பட்ட இனப்போரில் பாதிக்கப்பட்டவர்களை மீளக் குடியிருக்க வைப்பதற்காக அந்தத் தேசிய வனத்தின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்