சக மாணவர்கள் நால்வரைச் சுட்டுக்கொன்ற இளைஞனின் பெற்றோரை வேட்டையாடுகிறது பொலீஸ்
இவ்வார ஆரம்பத்தில் அமெரிக்காவின், மிச்சிகன் மா நிலத்தின் பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கொலைகளைச் செய்த இளைஞனின் பெற்றோரைத் தேடி வருகிறது பொலீஸ். காரணம் அவர்களுக்கும் அக்கொலைகளில் பங்கு இருந்ததாகக் கருதப்படுவது ஆகும்.
துப்பாக்கியைப் பாவித்த 15 வயது இளைஞனின் பெற்றோர் அவன் அதை இஷ்டப்படி எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அந்த இளைஞன் துப்பாக்கிச்சூடுகளை நடாத்த இருக்கிறான் என்று ஏற்கனவே பாடசாலை நிர்வாகம் அறிந்துகொண்டு பெற்றோரை அழைத்து அவனைப் பாடசாலையிலிருந்து வீட்டுக்குக் கூட்டிச்செல்லும்படி கேட்டுக்கொண்டபோதும் பெற்றோர்கள் செவிமடுக்கவில்லை.
“இப்படியான குற்றங்கள் நடப்பதற்கான வழிவகைகளை உண்டாக்குகிறவர்களும் அக்குற்றத்தில் பங்கெடுக்கிறார்கள். அதனால் குற்றத்தில் அவர்களின் பொறுப்பைச் சுட்டிக்காட்டி அவர்களைத் தண்டிப்பது அவசியம். அந்தச் செய்தியை மிகத் தெளிவாகச் சமூகத்துக்குத் தெரியப்படுத்தவேண்டும்,” என்கிறார் பெற்றோர்களையும் நீதிக்கு முன்னால் நிறுத்த முடிவுசெய்திருக்கும் வழக்கறிஞர் கரன் மக்டொனால்ட்.
பாவிக்கப்பட்ட துப்பாக்கியைக் கொலைகள் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இளைஞனின் தந்தை இளைஞனையும் கடைக்குக் கூட்டிச்சென்று வாங்கிக் கொடுத்திருக்கிறார். அது ஒரு முன்கூட்டிய நத்தார்ப் பரிசாக அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அத்துப்பாக்கியை அவர்கள் வீட்டில் பூட்டிப் பாதுகாக்காமல் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் இறந்த நாலு பிள்ளைகளின் கொலைக்கும் சக-குற்றவாளிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்