கவிஞன்

கவிதையில் தன்னை விதைத்து
வாழ்வை அறுவடை செய்பவன்..!

அநீதியை கண்ட அக்கணமே
பொங்கும் உணர்வாளன்..!

ரசனை பெருங்கடலில் குளித்து ,
கற்பனை பெருவெளியில் பறந்து _
கால இருக்கையின் மேல்
காலின் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பவன்.!

ஞானத்தை குடித்து ,
வார்த்தைகளை வார்த்து ,
கவிதைகளை வளர்த்து
மொழி அன்னைக்கு பரிசளிப்பவன்..!

ஒடுக்கப்பட்டவர்களுடைய,
ஒதுக்கப்பட்டவைகளுடைய உணர்வை நெருப்பு மழையாய் பொழிபவன்.!

அன்பை வழங்கும்
ஆக்ரோசமானவன் !
அழகை உண்ணும்
அனேகனானவன்..!

இலக்கியத்தில் மட்டும் கர்வமுடையவன்.!
மற்றபடி
இளகிய மனமுடையவன்.!

மனதை ஒரு நிலைப்படுத்தி ,
எண்ணங்களை கவனித்து
கவிதை எழுதுவதால் _
கவிதை எழுதுவதும்
தியானம் செய்வதும் ஒன்றென்பதால்
ஞானியானவன்..!

கண்களால் சுவாசித்து ,
மூளையால் நடந்து ,
இதயத்தால் சிந்தித்து ,
இயற்கையை ஆராதனை செய்து , _
வாழ்வை அள்ளிப்பருகி
பிரபஞ்சத்தின் மடியில் தூங்குபவன்..!

சட்டங்கள்
அநியாய சாட்டையை சுழற்றும் போது,
அரசுகள்
நாசகார திட்டங்கள் போடும்போது ,
ஊழலும் , லஞ்சமும்
ராஜ ஊர்வலம் போகும் போது ,
முதலாளிகள்
போதைக்கு தொழிலாளிகளின் ரத்தத்தை தொட்டுக்கொள்ளும் போது ,
அதிகார வர்க்கங்கள்
ஆணவ குடை பிடிக்கும் போது ,
நீதிகள்
மேல்தட்டோடு கைகுலுக்கும் போது,
செல்வந்தன்
செருக்கு நெருப்பை ஏழையின் மேல்
வீசும்போது ,
சர்வாதிகாரம்
ருத்ரதாண்டவம் ஆடும்போது ,
பெண்களுக்கு பெரும் கொடுமை நடக்கும்போது
தன் பேனா என்னும் பெரும் ஆயுதம் கொண்டு எதிர்ப்பவன்.!

தப்பு செய்தது இறைவனாக இருந்தாலும்
எதிர்த்திடும் போர் குணம் கொண்டவன்!

மதங்களின் மங்குனிதனத்தை ,
சாதிகளின் சட்டம்பிதனத்தை
சாஸ்திர சடங்குகளின் மடத்தனத்தை
சலவை செய்யும் விவேகமானவன்.!

பேரிரைச்சலில் பேரமைதியையும்
பேரமைதியில் பேரிரைச்சலையும் ,_
கூட்டத்தில் தனிமையையும்
தனிமையில் கூட்டத்தையும் உணரும்
விசித்திரமானவன்..!

காலனுக்கே
கருத்தடை செய்த
கலை மருத்துவன்.!

படைப்புகளை படைக்க
தனக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில்
தன்னால் படைக்க முடியாமல் போன
படைப்புகளை படைக்க
பரம்பொருளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்.!

சாதாரணமாக கடவுள் படைத்த படைப்புகளை _ தன்
சந்தன கவிதைகளால் அலங்கரித்து
கடவுளுக்கே ஆச்சரியமூட்டுபவன்.!

பழமையை படித்து
புதுமையை படைக்கும்
நவீன வித்தகன்..!

படைப்புக்கள் அனைத்திலும் ஊடுருவிப் பாய்ந்து
அதன் உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பவன்..!

எல்லா படைப்புகளோடும் பேச எல்லாவற்றின் மொழியை அறிந்தவன்..!

கைகோர்த்த காதலானாலும் ,
கைவிட்ட காதலானாலும் _ அதை
நிழற்குடையாக்கி அதன் நிழலில்
மரணம் வரை மகிழ்ந்து தூங்குபவன் !

சில நேரம் உடம்பற்றவனாகவும் ,
சிலநேரம் உயிரற்றவனாகவும்
உலவும் அதியமானவன்..!

எந்த வட்டத்திற்குள்ளும்
சுருட்ட முடியாத விஸ்வரூபமுடையவன்.!
எந்த கட்டுக்குள்ளும்
அடக்கமுடியாத காட்டாறு போன்றவன்.!

தனக்குள் விதையாக
தன்னையே விதைத்து
வானுயர வளர்ந்த
ஆல விருட்சம்..!
நடமாடும்
ஞான விருட்சம்.!

வீரியமிக்க ஞாபகத்தின்
விலாசம்.!
நேரியமிக்க சமத்துவத்தின்
விசாலம்.!

நரகத்தின் சூட்டில் வெந்து
சொர்க்கத்தின் குளிரை அனுபவிப்பவன்.!

பாவைப் பூக்கள் விரும்பி பழகும்
ஞான தேனி.!

தினம் தினம் புது அவதாரம் எடுத்து
தன்னைத் தாக்கிய உணர்வின் அரிதாரம் பூசியவன்.!

எப்பொழுதெல்லாம் கவிதை வாசிக்கின்றீர்களே தற்காப்புடன் இருங்கள் _
அவனின் எழுத்தின் கூர்மைகள்
உங்களைத் தாக்கிவிடக்கூடும்.!!!

எங்கேயாவது கவிஞனை கண்டால்
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்
அவனுக்குள் எரியும் அக்கினி நெருப்பு
உங்களை சுட்டுவிடக்கூடும்.!!!!

எழுதுவது; விஜய் சேசுலா