தனது பாடசாலையில் 3 சக மாணவர்களைச் சுட்டுக் கொன்ற 15 வயது இளைஞன்.

அமெரிக்காவின் தெற்கிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் பாடசாலையொன்றில் இவ்வருடத்தின் மோசமான பாடசாலைக் கொலைகள் நடந்திருக்கின்றன. ஒக்ஸ்போர்ட் என்ற சிறிய நகரிலேயே அந்தத் துப்பாக்கிப்பிரயோகம் நடந்திருக்கிறது.

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மூவருமே அப்பாடசாலையின் மாணவர்கள். 14,17 வயதுச் சிறுமிகளும், ஒரு 16 வயதுப் பையனும் கொல்லப்பட்டிருக்கிறான். அவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டார்களா அல்லது கண்ணுக்கு அகப்பட்டவர்களை அவன் கொன்றானா என்பது பற்றிய விபரங்களில்லை. காயமடைந்தவர்களில் ஒரு ஆசிரியரும், ஏழு மாணவர்களும் அடக்கம்.

அவர்களில் 14 வயதான இருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பாடசாலை மாணவி, மாணவர்களான அவர்களிருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

மதிய நேரத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. சுட்ட மாணவன் எவ்வித எதிர்ப்புமின்றிக் கைது செய்யப்பட்டிருக்கிறான். அவனது பெற்றோர்களால் வழக்கறிஞர் ஒழுங்குசெய்யப்பட்டு அவன் எதையும் சொல்ல மறுத்து வருகிறான்.

2021 இல் அமெரிக்காவின் வெவ்வேறு பாகங்களில் 138 பாடசாலைகளில் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதுவரை எங்கும் 2 பேருக்கு மேல் கொல்லப்படவில்லை. கொரோனாத்தொற்றுக் காலத்தில் குறைந்திருந்த இதுபோன்ற பாடசாலைத்துப்பாக்கிச்சூட்டுக் கொலைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்