அமெரிக்க அணுமின்சார உலைகளில் பாவிக்கத் தேவையான எரிபொருளை விற்பது ரஷ்யா மட்டுமே!

கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று புதிய தலைமுறை அணுமின்சார உலைகளை நிறுவுதல். காலநிலை மாற்றத்தைத் தடுக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்த முடிவுகளின்படி படிம நிலையிலற்ற வெவ்வேறு எரிபொருட்களைப் பாவித்து நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய அமெரிக்க நிறுவனங்கள் கண்டுபிடித்திருக்கும் சிறிய அளவிலான அணுமின்சார உலைகளுக்குக் குறிப்பிட்ட விதமான எரிபொருள் தேவையாக இருக்கிறது.

குறைந்த சக்தியுள்ள யுரேனியத்தின் (HALEU)சக்தியால் குறிப்பிட்ட அணுமின்சார உலைகள் இயக்கப்படுகின்றன. அவ்விதமான யுரேனியம் ரஷ்யாவின் Rosatom ஆல் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் ரஷ்ய அரசுக்குச் சொந்தமானது. உக்ரேன் மீதான போரால் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார முடக்கங்களைப் போட்டிருக்கிறது. அக்காரணத்தால் குறிப்பிட்ட யுரேனியத்தை அமெரிக்காவோ மற்றைய நாடுகளோ வாங்குவது தடைக்குரியது.

தமது நிறுவனங்கள் தயாரிக்கும் அணுமின்சார உலைகளைத் தாம் பாவிக்க முடியாதது மட்டுமன்றி அவ்வுலைகளை வாங்கும் நாடுகளும் பாவிக்க முடியாது என்று கைகள் கட்டப்பட்ட நிலையிலிருக்கின்றன அந்த நிறுவனங்கள். குறிப்பிட்ட சக்திக்கு மாற்றாக அந்த உலைகளில் பாவிக்கக்கூடிய சக்தியைக் கண்டுபிடிக்காமல் அவ்வுலைகளை உலகச் சந்தையில் விற்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 

அணுசக்தியால் உலகுக்குத் தேவையான 10 % எரிசக்தி பெறப்படுகிறது. காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது அத்தியாவசியமான நிலைமையில் உலக நாடுகள் பலவும் வெவ்வேறு எரிசக்திகளைப் பாவிக்க முடிவுசெய்திருக்கின்றன. அவைகளில் ஒன்று சிறிய அளவிலான அணு மின்சார உலைகளாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *