சகோதரனுக்கு மிண்டுகொடுத்ததுக்காகப் பதவியிழந்த கிரிஸ் கூமோவும் அதே குற்றம் செய்தாரா?
சில நாட்களுக்கு முன்னர் சி.என்.என் நிறுவனம் தனது பிரபல தொலைக்காட்சி நிருபர் கிரிஸ் கூமோவை வீட்டுக்கனுப்பியது. அதற்குக் காரணம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பதவியை விட்டிறங்கிய தனது சகோதரனும், நியூ யோர்க் ஆளுனருமான ஆண்டிரூ கூமோ பற்றி வெளியாகிய பெண்கள் மீதான பலாத்காரம் பற்றிய குற்றங்களை மறைக்க முயன்றது, என்று குறிப்பிடப்பட்டது.
ஆண்டிரூ பற்றி நீண்ட காலமாகவே பாலியல் துன்புறுத்தல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அவை பற்றிய விசாரணைகள் நடாத்தப்பட்டு விபரங்கள் 168 பக்க அறிக்கையாக வெளியாகின. அதைப் பற்றித் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தபோது தான் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை வெறுப்பது போலக் காட்டினார் கிரிஸ் கூமோ.
ஆனால், அதன் பின்பு கிரிஸ் தனது சகோதரன் ஆண்டிரூ, சாட்டப்பட்ட குற்றங்களுக்கு எப்படிப் பதிலளிக்கவேண்டுமென்ற விபரங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். அத்துடன் அவைகளை எப்படி பத்திரிகைகளில், பொதுவெளியில் எதிர்கொள்வது என்பதற்கான திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தார் என்பது வெளியாகியிருக்கிறது.
கிரிஸ் கூமோ வெளியேற்றப்பட்ட பின்னர் வெளியாகியிருக்கும் விபரங்கள் அவரும் கூடப் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றன. தனது சக ஊழியர் ஒருவரை அவர் நீண்ட காலமாகப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அது பற்றி சி.என்.என் நிறுவனம் ஒரு தனியார் வழக்கறிஞர் நிறுவனம் மூலமாக ஆராய்ந்து வருகிறது.
செப்டெம்பர் மாதமே கிரிஸ் கூமோ தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நியூ யோர்க் போஸ்டில் மேலுமொரு பத்திரிகையாளர் குறிப்பிட்டிருந்தார். அதற்காகக் கிரிஸ் அச்சமயம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தார்.
தற்போது தன்மீது வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் கிரிஸ் கூமோ.
சாள்ஸ் ஜெ. போமன்