புலம்பெயர்ந்தவர்கள் தமது நாடுகளுக்கு அனுப்பும் தொகை எதிர்பார்த்ததுக்கு அதிகமாகியிருக்கிறது.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாக்காலப் பின்னடைவுகளுக்குப் பின்பு அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாடுகளிலிருந்து வறிய, வளரும் நாடுகளில் தமது குடும்பத்தினருக்கு அனுப்பும் தொகை எதிர்பார்த்ததைவிட அதிகமாகியிருப்பதாக உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
கொரோனாத்தொற்றுக்களால் பொருளாதாரங்கள் ஸ்தம்பித்ததால் 2020 இல் தமது நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் தொகை அதற்கு முந்தைய வருடத்தை விட சுமார் 1.7 % ஆல் குறைந்திருந்தது. ஆனால் அது 2021 இல் சுமார் 7.3 % ஆல் அதிகரித்திருக்கிறது. 589 பில்லியன் டொலர்கள் வறிய, வளரும் நாடுகளுக்கு 2021 இல் அனுப்பப்பட்டிருப்பதாக உலக வங்கி கணக்கிட்டிருக்கிறது.
லத்தீன் அமெரிக்கா, கரீபிய நாடுகளுக்கு அனுப்பப்படும் தொகைகளிலேயே அதிக வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவை சராசரியாக 21 % ஆல் அதிகரித்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கு அனுப்பப்படும் தொகை 9.7 % ஆலும், தென் ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படும் தொகை 8 % ஆலும் சராசரியாக அதிகரித்திருக்கிறது. ஆபிரிக்காவின் சஹாரா பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்ட தொகை சுமார் 6 % ஆல் அதிகரித்திருக்கிறது.
வறிய மற்றும் வளரும் நாடுகளிலிருந்து வெளியேறி அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொழிலாளர்களாக இருந்து வருபவர்கள் தமது நாடுகளுக்கு அனுப்பும் பணம் அந்த நாட்டவருக்கு உதவும் அளவுக்கு, மனிதாபிமான உதவிகள், அந்தந்த நாட்டின் உதவித்தொகைகளை விட அதிகமான அளவு உதவுவதாகப் பொருளாதார விற்பன்னர்கள் குறிப்பிடுவதுண்டு. அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார வளர்ச்சி அந்தந்த நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்