பாப்பரசருடன் நெருக்கமாக இயங்கிவரும் இரண்டு கர்தினால்களுக்குக் கொரோனாத் தொற்று!

வத்திக்கான் இதுவரை வெளிப்படுத்தாவிட்டாலும், கொன்ராட் கிரயோவ்ஸ்கி [57 வயது], யூஸெப்பெ பெர்தல்லோ [78 வயது] ஆகிய இரண்டு கர்தினால்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 

ரோம் நகரின் நலிந்தவர்களுக்கு உதவிகள் செய்யும் அமைப்புக்களுடன் நெருங்கிச் சேவைகள் செய்பவரான கிரயோவ்ஸ்கி கடும் காய்ச்சலால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பெர்தல்லோ தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

திங்களன்று நடந்த கூரியா என்றழைக்கப்படும் வத்திக்கானில் பாப்பரசருடன் நத்தார் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொண்டார்களா என்பது பற்றித் தெரியவில்லை.  

கொவிட் 19 பரவ ஆரம்பித்த சமயத்தில் பாப்பரசரின் கட்டடத்தில் வசிக்கும் சுமார் ஒரு டசன் வத்திக்கான் காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். செப்டம்பரில் இரண்டு கர்தினால்கள் தொற்றுக்குள்ளாகிச் சுகமடைந்தார்கள்.

ஐரோப்பாவிலேயே அதிக உயிர்களைக் கொவிட் 19 குடித்த நாடு இத்தாலி. இதுவரை சுமார் 2 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகி 69,000 பேர்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *