நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின் பக்கம் நிற்கும் தலைவன், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளத்தை உயர்த்துபவர் போன்ற அடையாளங்களைத் தனக்கு ஏற்படுத்திக்கொண்டவர் மோடி. அப்பலத்தினால் பிரதமரான அவர் தான் ஏற்படுத்திக்கொண்ட பிம்பத்தை மக்களிடையே காப்பாற்றி வந்த வரை பெரும்பாலானவர்களால் போற்றப்பட்டார்.

இரண்டாவது கொரோனாத் தொற்றுக்களின் அலை மோடியின் ஆதரவை அடித்து வீழ்த்துவதாகத் தெரிகிறது. முதலாவது அலையால் மக்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் இழப்புக்களை எதிர்கொண்டார்கள். இரண்டாவது அலையில் 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு உத்தியோகபூர்வமான இறப்புக்கள் 287 000 ஐத் தாண்டியிருக்கிறது. உண்மையான இலக்கங்கள் அதை விடப் பல மடங்கு என்பதை மக்கள் நேரடியாகத் தமது தினசரி வாழ்க்கையில் காண்கிறார்கள். 

இரண்டாவதாகப் பரவிக்கொண்டிருக்கும் தொற்று அலையில் மக்களின் இழப்பு பெரும்பாலும் மனித உயிர்கள், ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். முதலாவது பரவலின்போது அரசினால் மெதுவாக ஒழுங்கு செய்யப்பட்ட மருத்துவ சேவை, சமூக பாதுகாப்பு என்பவை இரண்டாவது தொற்று அலையின்போது காணாமல் போய்விட்டன. 

தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போது கொவிட் 19 மருத்துவத்துக்கான மருந்துகள், உபகரணங்கள், அவசர சிகிச்சைக்கான பிராணவாயு, வாகன சேவைகள், ஏன் இறந்தவர்களைக் கௌரவமான முறையில் தகனம் செய்வதற்கான வசதிகளுமே படு மோசமான நிலையிலிருந்தன. பற்றாக்குறை, ஒழுங்கின்மை, பொறுப்பின்மை போன்றவையே இந்தியாவின் கொரோனாத் தொற்றுக்காலத்தில் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

அத்துடன் உலக நாடுகளுக்கெல்லாம் தடுப்பு மருந்து தயாரித்துக் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்ட இந்திய தயாரிப்பு நிறுவனங்களும் மோடி அரசிடம் கேட்டுக்கொண்ட முதலீடு, உபகரணங்கள் போன்றவை ஒழுங்குசெய்யப்படாததால் எதிர்பார்த்தபடி தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை. இந்தியாவுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளுக்கே தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது.

இவையெல்லாம் சேர்ந்து மோடியின் அரசு பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அதற்கான ஆதரவும் வீழ்ச்சியடைந்து வருகிறது. தன்னைச் சுற்றி ஒரு பலமான ஆதரவை, எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்த மோடி மீதான விமர்சனங்களும் அவருக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகின்றன. 

உலக நாட்டுத் தலைவர்களுக்கான ஆதரவை வாராவாரம் அளவிடும் அமெரிக்க கணிப்பீட்டு (Morning consult) நிறுவனத்தின்படி ஏப்ரல் ஆரம்பத்தில் 73 % மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த மோடி தன் பொறுப்பை ஒழுங்காகச் செய்கிறார் என்று மே மாதத்தில் நம்புகிறவர்கள் 63 % ஆகும். அதே போலவே இந்திய மாநிலங்களில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீடுகளும் மோடிக்கான ஆதரவு பெரிதும் குறைந்திருப்பதைக் காட்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *