இந்தியச் சிறைகளில் விசாரணைகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு உதவ இலவச சட்டத்தரணிகள்.

இந்தியாவின் 1,378 சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களி 76 விகிதமானோர் நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருப்பவர்களாகும். பெரும்பாலும் படிப்பறிவற்றவர்கள், ஏழைகளாக இருக்கும் அவர்கள் சட்டத்தரணிகளை வைத்துக்கொள்ள வசதியில்லாததால் வருடக்கணக்காகவும் நீதிமன்ற விசாரணைகளுக்காகக் காத்திருக்கவேண்டியிருக்கிறது. அந்த நிலைமை மாற்ற அவர்களுக்கு அரச நிதியில் சட்டத்தரணிகளை ஒழுங்குசெய்ய இந்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

இந்திய அரசின் “தேசிய சட்ட உதவி அதிகாரம்” (Nalsa) இனிமேல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதற்காக அதிகாரிகளையும், சட்டத்தரணிகளையும் நியமிக்கவிருக்கிறது. அச்சட்டத்தரணிகள் பிணையில் வெளியேறுதல் போன்ற உதவிகளைச் செய்வார்கள். சிறைகளிலிருக்கும் 489,000 கைதிகளில் நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருக்கும் சுமார் 372,000 கைதிகளுக்கு இலவச சட்டத்தரணிகளை ஒழுங்கு செய்வதன் மூலம் சமூகத்தின் பலவீனமானவர்களுக்குக் கைகொடுப்பதுடன் நிறைந்துபோயிருக்கும் சிறைகளில் கைதிகளின் தொகையையும் குறைக்க முடியும். நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருப்பவர்களில் 68 % பேர் படிப்பறிவற்றவர்களும், பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்தியவர்களாகும்.

இந்திய அரசு வசதியற்றவர்களுக்கு வழக்குகளில் ஆலோசனை கொடுப்பதற்கும், சட்டத்தரணி உதவி பெறவும் நிதியை ஒதுக்கியிருக்கிறது. அப்படி உதவி பெறுவதற்காக அவர்கள் விண்னப்பிக்கவேண்டும். ஆனால், படிப்பறிவற்றவர்கள், விபரம் தெரியாதவர்கள் அதற்கான வழிமுறைகளை அறியாமலிருக்கிறார்கள். 2016 – 2019 வரையில் உதவி பெற உரிமையுள்ளவர்களில் சுமார் 8 விகிதத்துக்கும் குறைவானவர்களே அதைப் பெற்றிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரங்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *