பிரேசில் பாகத்திலிருக்கும் அமெசான் காடுகளில் ஒரே நாளில் 3,358 காட்டுத்தீக்கள் உண்டாகியிருக்கின்றன.

பதினைந்து வருடங்களில் காணாத அளவு காட்டுத்தீக்கள் பிரேசில் நாட்டின் அமெசான் காடுகளில் உண்டாகியிருப்பதாகக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. இவ்வாரத்தில் திங்கள் கிழமையன்று மட்டுமே 3,358 காட்டுத்தீக்கள் உருவாகியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பிரேசில் நாட்டின் விவசாயிகள் தமது விளைவிக்கும் பகுதிகளை அதிகரிக்கும் நோக்குடன் வேண்டுமென்றே காடுகளை எரித்துவிடுவதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுவதுண்டு. திங்களன்று காணப்பட்ட குறிப்பிட்ட காட்டுத்தீக்கள் குறிப்பிட்ட சில திட்டமிட்டு உண்டாக்கியதாகத் தெரியவில்லை என்று அவற்றைக் கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

பிரேசிலின் ஜனாதிபதி தனது நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகக் காடுகளை அழிப்பவர்களை ஊக்குவிப்பதாகச் சர்வதேச ரீதியில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதுபற்றிக் கவனமெடுக்கும்படி நீண்ட காலமாக எழுப்பப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதி பொல்சனாரோ ஒதுக்கித்தள்ளிவிட்டுத் தனது நாட்டின் பொருளாதார உற்பத்தியே முக்கியம் என்று குறிப்பிட்டு வருகிறார்.

பிரேசிலில் காடுகள் எரிதல் நாட்டின் வடக்குப் பாகங்களை நோக்கிப் பரவிவருவதாகத் தெரிகிறது. இந்த வேகத்தில் அமெசான் காடுகள் அழிக்கப்படுமானால் அப்பிராந்தியம் எதிர்பார்த்ததை விட வேகமாகச் சமதரைப் பிராந்தியமாகும் என்று சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ, போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *