“பதினொரு நாட்கள் போர்” முடிந்ததற்காக காஸா வீதிகளில் கொண்டாடினார்கள் பாலஸ்தீனர்கள்.

வெள்ளியன்று 02.00 இல் இஸ்ராயேல் – ஹமாஸ் இயக்கினருக்கிடையிலான போர்நிறுத்தம் ஆரம்பித்தது. அதையொட்டி காஸாவில் வாழும் மக்கள் வீதிகளுக்கு வந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். ஈத் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகியிருந்த அவர்களால் போர் ஆரம்பித்ததால் அதைக் கொண்டாடமுடியவில்லை. சிலர் அப்பண்டிகையையும் சேர்த்துக் கொண்டாடினார்கள்.

வழக்கம்போலவே இந்தப் போர் நிறுத்தமும் காஸாவின் எல்லை நாடான எகிப்தின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கத்தார், ஜோர்டான், ஜேர்மனி ஆகிய நாடுகளும் நேரடியாக இரண்டு தரப்பாரையும் தொடர்ந்து சந்தித்துப் போர்நிறுத்தம் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தன.

ஐ.நா-வும், அதன் பாதுகாப்புச் சபையினரும் மூன்று தடவைகள் சந்தித்தும் எவ்வித முடிவுக்கும் வரமுடியாமலிருந்தது. புதனன்று முதல் அமெரிக்காவும் இஸ்ராயேல் போரின் வேகத்தைக் குறைக்கவேண்டுமென்று வலியுறுத்த ஆரம்பித்திருந்தது. நத்தான்யாஹு தனது நட்பு நாடான அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

போரின் இரண்டு பகுதியாரும் தத்தம் பக்கத்தில் தாமே வென்றதாக அறிவித்திருக்கிறார்கள். காஸாவில் ஹமாஸ் “நாம் அல் அக்ஸாவின் வாள்கள், பாலஸ்தீனர்களின் பாதுகாவலர்கள்,” என்று வெற்றிக்குரல் எழுப்பி வருகிறது. எதிர்ப்பக்கத்தில் இஸ்ராயேல் “நாம் ஹமாஸுக்குப் பலமான அழிவை உண்டாக்கியிருக்கிறோம்,” என்று குறிப்பிட்டு வருகிறது. 

தற்போதைய நிலைமையில் போர் நிறுத்தம் ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே. எகிப்தின் ராஜதந்திரிகள் போர் மீண்டும் பத்திக்கொள்ளாமலிருக்க இரு பக்கத்துக்கும் போயிருக்கிறார்கள். “இன்று போர் நிறுத்தம் ஆரம்பமாகிறது என்பது உண்மையே. ஆனால் எங்கள் விரல் விசையின் மீதுதான் இருக்கிறது என்பது இஸ்ராயேலுக்கும் உலகத்துக்கும் தெரியவேண்டும். எந்தக் கணத்திலும் மீண்டும் எதிரியைத் தாக்க நாம் தயார். எங்கள் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் முழு முயற்சி எடுப்போம்,” என்று ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் எஸ்ஸாத் எல் – ரஷீக் தெரிவித்தார்.

போர் ஆரம்பிப்பதற்கான உரசலின் முதல் தீப்பொறியாக விளங்கிய “ஆறு பாலஸ்தீனக் குடும்பங்களை வீடுகளிலிருந்து வெளியேற்றுதல்,” நிறுத்தப்படவேண்டும் என்று ஹமாஸ் இயக்கம் கோரி வருகிறது. ஜெருசலேம் அரசியலில் மூக்கை நுழைக்கும் உரிமை ஹமாஸுக்கு இருப்பதை அனுமதிக்க நத்தான்யாஹூ தயாராக இல்லை. அவரைப் பொறுத்தவரை அந்த நிலைமை இஸ்ராலிய அரசியலில் அவரைப் பலவீனமானவராகக் காட்டும். எனவே நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமையைத் தன்வசப்படுத்த ஹமாசின் கையோங்காமலிருப்பது அவருக்கு முக்கியம்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *