ரஷ்யாவில் வாழும் வெளிநாட்டவர்கள் கொரோனா, பாலியல் நோய்களுக்காகப் பரிசோதிக்கப்படுவார்கள்.
டிசம்பர் 29 ம் திகதி முதல் ரஷ்யாவில் அமுலுக்கு வரவிருக்கும் சட்டமொன்று நாட்டில் வாழும் வெளிநாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தம்மை கொரோனா, எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள், காசநோய் போன்றவை இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். ராஜதந்திரிகள் மட்டும் அந்தச் சட்டத்துக்கு விலக்காகாவர்கள்.
ஆறு வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொருவரும் மேற்கண்ட பரிசீலனைகளைச் செய்துகொள்ளும்போது அவர்களுடைய சகல விபரங்களும் ரஷ்யாவின் அதிகாரத்திடம் பதியப்பட்டுச் சேமிக்கப்படும். இந்தச் சட்டத்தின் விளைவுகள் என்னாகும் என்று ரஷ்யாவில் செயற்படும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கலங்குகின்றன. சட்டம் இவ்வருட நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்போது அதன் விளைவுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் கவனிக்கத் தவறிவிட்டன.
ஐரோப்பாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து ரஷ்யாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சிடம் வரவிருக்கும் சட்டங்கள் விதிவிலக்குகள் தரப்படவேண்டும் என்று கோரியிருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து அவர்கள் ரஷ்யாவில் சேவை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் வெவ்வேறு துறையைச் சேர்ந்த வல்லுனர்களை அப்படியான ஒரு சட்டம் துரத்திவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்