நாணயமதிப்புக் கவிழ்ந்துகொண்டேயிருக்கிறது, பணவீக்கமும் கூடவே. துருக்கியின் நிலைமை மோசமாகிறது.

துருக்கியின் பணவீக்கம் படுவேகமாக உயர, நாணயமதிப்போ தலைகீழாக விழுந்துகொண்டேயிருக்கிறது. சாதாரண மக்களின் அன்றாட வாழ்வு கடினமாகிக்கொண்டேயிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைத் தன்னிஷ்டப்படி இயக்கி வரும் ஜனாதிபதி எர்டகான் நிலைமையை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பது எவருக்குமே புரியவில்லை என்கிறார்கள் அரசியல், பொருளாதார அவதானிகள்.

 

இஸ்தான்புல்லின் சாதாரண வாழ்க்கைச் செலவு ஒரே வருடத்தில் 50 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. கோதுமை விலை 109 %, சூரியகாந்திப் பூ எண்ணெய் விலை 137 %, எரிவாயு 102 %, சக்கரை 90 % ஆல் விலையேறியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. 

துருக்கிய நாணயமான லிரா தனது பெறுமதியில் 46 விகிதத்தை இவ்வருடத்தில் இழந்து, தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துகொண்டேயிருக்கிறது.  

துருக்கிய நிறுவனங்கள் தங்களது பொருளாதாரத்தை அமெரிக்க டொலரிலேயே பரிபாலிக்கின்றன. அதனால் நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியடையும்போது அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டிய வட்டி, கடன், இறக்குமதிக்காகக் கொடுக்கவேண்டிய விலை ஆகியவை அதிகரித்துக்கொண்டே போகின்றன. அவைகளைக் கடைசியில் தாங்குபவர்கள் சாதாரண கொள்வனவாளர்களே.

சாதாரணமான பொருளாதாரக் கோட்பாடுகளின்படி நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவர் மத்திய வங்கி தனது கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டும். எர்டகானோ வட்டியை மிகக் குறைவாகவே வைத்திருப்பதன் மூலம் தயாரிப்புச் செலவு குறைவதால் காலப்போக்கில் பொருளாதாரம் வளரும் என்று குறிப்பிட்டு வட்டியை அதிகரிக்கும் எண்ணும் மத்திய வங்கி ஆளுனர்களைப் பதவியிலிருந்து விலக்குகிறார்.

இஸ்லாம் வட்டி வாங்கலாகாது என்று குறிப்பிடுவதால் தான் எர்டகான் வட்டி விகிதத்தை மிகக் குறைவாகவே வைத்து நாட்டின் பொருளாதாரத்தைச் சூதாடுகிறார் என்றும் பலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2023 இல் வரவிருக்கும் தேர்தலில் வெல்வதற்காகவே அவர் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்காமல் காலம் தள்ளி வருகிறார் என்றும் ஒரு சாரார் குற்றஞ்சாட்டுகிறார்கள். எப்படியாயினும் நாட்டின் பொருளாதாரம் இறங்குமுகமாகவே போய்க்கொண்டிருக்கிறது. மக்களிடையே பெரும் எரிச்சலும் உண்டாகி வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். 

திங்களன்று எர்டகான் தான் நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியை ஈடுகட்டும் திட்டங்களை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்தபின் லிரா ஓரளவு ஸ்திரப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவர் தான் எடுக்கப்போகுன் நடவடிக்கைகளின் விபரங்களை அறிவிக்காததால் பொருளாதார அவதானிகள் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்