மூன்றே வாரங்களின் பின்னர் மீண்டும் புத்தினைச் சந்திக்கிறார் எர்டகான். இம்முறை ரஷ்யாவில்.

துருக்கிய ஜனாதிபதி எர்டகான் வெள்ளிக்கிழமையன்று கருங்கடலை அடுத்திருக்கும் ரஷ்ய நகரமான சோச்சியில் சந்திக்கிறார்.  அரசியல், பொருளாதாரக் கூட்டுறவை ரஷ்யாவுடன் விஸ்தரித்துக்கொள்ள விரும்புகிறார் எர்டகான். அதைத் தவிர சிரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் குர்தீஷ் மக்களின் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி ஒரு “பாதுகாப்பு வலயத்தை” நிறுவவும் விரும்புகிறார். அதற்காகவும் அவர் ரஷ்யாவின் பச்சை விளக்கை எதிர்பார்க்கிறார்கள்.

சோச்சி நகரில் புத்தினைச் சந்திக்கும்போது எர்டகான் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யும் முதலாவது நாட்டோ அமைப்பு அங்கத்துவராகிறார். சில வாரங்களுக்கு முன்னர் ஈரானில் புத்தினைச் சந்தித்தபின் உக்ரேனின் தானிய ஏற்றுமதிக் கப்பல் கருங்கடல் துறைமுகத்திலிருந்து பிரயாணிக்க ஆரம்பித்து லெபனானை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அச்சந்திப்பு சர்வதேச ரீதியில் அவருக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்திருக்கிறது.

சோச்சியின் சந்திப்பில் உக்ரேன் மீதான போரை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளவும் இருக்கிறார் எர்டகான். அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் குர்தீஷ் அமைப்புகளைத் தீவிரவாதிகள் என்றே எர்டகான் குறிப்பிடுகிறார். அவர்களைத் துருக்கி தாக்க அனுமதிக்கும்பட்சத்தில் சிரியாவின் போர் மீண்டும் பெரிதாகுவதை ரஷ்யா விரும்பவில்லை. 

ரஷ்யாவைப் போலவே துருக்கியும் மேற்கு நாடுகளினால் ஒதுக்கப்பட்டு வருகிறது. நாட்டோ அங்கத்துவ நாடான துருக்கி நூலிழையில் நடந்து மேற்கு நாடுகளிடமும், ரஷ்யாவிடமும் தனக்குத் தேவையான உதவிகளைப் பெறுவதில் குறியாக இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கியில் பணவீக்கம் 79 % என்று குறிப்பிடப்படுகிறது.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் எர்டகானின் ஆட்சிக்கு மவுசு குறைந்து வருகிறது. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கும் எர்டகான் முடிந்தவரை தனது முயற்சியால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விரும்புகிறார். அதற்காகவும் அவருக்கு புத்தினின் ஆதரவு தேவைப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *