தனக்கெதிரான பலமான அரசியல்வாதியை அரசியல் முடக்கம் செய்து சிறைக்கனுப்பினார் துருக்கிய ஜனாதிபதி.

டிசம்பர் 14 ம் திகதியன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் இஸ்தான்புல் நகரபிதா எக்ரம் இமமொகுலுவுக்கு 2 வருடங்கள் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இமமொகுலு எதிர்காலத்தில் அரசியலில் பங்கெடுக்கலாகாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இமமொகுலு துருக்கிய  அரசியலில் கணிசமாகப் பலமடைந்திருக்கும் ஒரு அரசியல்வாதியும், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எர்டகானுக்குச் சவாலாக இருப்பவருமாகும்.

2019 ம் ஆண்டு இஸ்தான்புல் நகரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற இமமொகுலு அதையடுத்துப் பொது நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அச்சமயம் தனது உரையில் அவர் அரச அதிகாரிகளை விமர்சித்து அவர்களை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டைச் சுமத்தியே அவர் மீது வழக்கு நடத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத் தீர்ப்பை மேன்முறையீடு செய்திருக்கிறார் இமமொகுலு. 

பலமான அரசியல் ஆதரவைக் கொண்டிருக்கும் இமமொகுலு மீது தண்டனை விதிக்கப்பட்டால் கலவரம் ஏற்படும் அபாயம் இருந்ததால் நீதிமன்றத்தைச் சுற்றிப் பொலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். 

“நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றையத் துருக்கியில் சட்டம், ஒழுங்கு எல்லாருக்கும் பொதுவானதாக இல்லை என்பதையே காட்டுகிறது. அடுத்த ஜூன் மாதத் தேர்தலில் அதை எதிர்த்து மக்கள் வாக்களிப்பார்கள்,” என்று தீர்ப்பின் பின்னர் தனது ஆதரவாளர்கள் முன்னர் உரை நிகழ்த்தினார் இமமொகுலு.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய தரப்புகளிலிருந்தும் இமமொகுலு மீதான தீர்ப்பு பற்றிய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *