மொரிஷியஸ் பவளப்பாறைகளில் மோதி சூழலுக்குப் பாதகம் விளைவித்த கப்பல் தலைவருக்கு 20 மாதச் சிறை.
ஜூலை 2020 இல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மிகமோசமான சூழல் மாசுபாட்டை உண்டாக்கியது MV Wakashio என்ற கப்பல். மொரீஷியஸுக்குச் சொந்தமான கடற்பரப்பிலிருக்கும் பவளப்பாறைகளில் மோதிய அக்கப்பல் சுமார் 1,000 கன மீற்றர் நச்சுக்கலந்த எண்ணெயை அங்கே சிந்தியது.
பனாமா நாட்டுக் கொடியில் பயணித்த அக்கப்பல் ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. தமது கவனக்குறைவினால் தாம் அந்த அழிவுக்குக் காரணமாக இருந்ததாகக் கப்பலின் தலைமை மாலுமியும், முதன்மை அதிகாரியும் பொறுப்பேற்றனர். தமது தவறுக்காக மன்னிப்புக் கோரினர். அவற்றை மனதில் கொண்டு அவர்களிருவருக்கும் 20 மாதச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் மொரிஷியஸ் நீதிபதியொருவர்.
சுனில் குமார் நடேஷ்வர், ஜயந்திரா திலகரத்ன ஆகிய இருவரும் மதுபோதையில் விருந்தில் ஈடுபட்டபோதே அந்த விபத்து நடந்ததாகத் தெரியவந்தது. சிங்கப்பூரிலிருந்து பிரேசிலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அந்தக் கப்பலில் 3,800 தொன் எரிநெய்யும், 2,000 தொன் டீசலும் இருந்தது.
நச்சு எண்ணெய் சிந்தியதையடுத்துப் பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைகளில் கூடி துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் அந்த விபத்துக் கையாளப்பட்ட விதத்தை எதிர்த்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்