ஷீயான் – முடக்கப்பட்ட சீனாவின் 13 மில்லியன் மக்களைக் கொண்ட நகரம்.
உலக நாடுகளெங்கிலும் கொவிட் 19 பரவல் மோசமாக இருப்பினும் பெரும்பாலான நாடுகளும் பொது முடக்கங்கள் எதையும் கொண்டுவரவில்லை. சீனாவோ எந்த நகரில் கொரோனாப் பரவல் ஆரம்பித்தாலும் தயைதாட்சண்யமின்றி நகரை முடக்கிவிட்டு பெருமளவில் மக்களிடையே தொற்றுப்பரிசீலனை செய்ய ஆரம்பிக்கிறது.
திங்களன்று முழுமையான பொது முடக்கம் சீனாவின் Xi’an ஷியான் நகரில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 13 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அந்த நகரம் உலகின் முக்கிய தொழிற்சாலைகளைக் கொண்டது. அத்துடன் சீனாவின் பிரபல சுற்றுலாத் தலமுமாகும். சாம்சுங், மைக்ரோன் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்ட அந்த நகரை மூடியிருப்பது தமது தயாரிப்பு, போக்குவரத்து, அடிப்படைப் பொருட்களை பெற்றுக்கொள்ளல் போன்றவைக்கு இடைஞ்சலாக இருப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஷீயான் நகரில் டிசம்பர் 09 ம் திகதி முதல் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனாத் தொற்றுக்கள் பதியப்பட்டன. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் அங்கே முடக்கங்கள் கொண்டுவரப்படுவதாக சீன அரசு தெரிவித்தது. முதல் கட்டமாக இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை குடும்ப அங்கத்தினரொருவர் வெளியே சென்று உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டது. அதையடுத்த கட்டமாக மூன்று நாட்களுக்கொருமுறையே கொள்வனவு என்று குறிப்பிடப்பட்டு, திங்களன்று முதல் எவருமே வெளியேறலாகாது என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
மக்கள் தமது தேவைக்கான உணவுப்பொருட்களின்றிப் பல பகுதிகளிலும் தவிப்பதாகச் சீனாவின் சமூகவலைத்தளங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், சீன அரசோ அவர்களுக்கான உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடின்றி அரசே விநியோகித்து வருவதாகச் செய்திகள் மூலம் தெரிவித்துப் படங்களையும் வெளியிட்டு வருகிறது. நகரில் ஆறு தடவைகள் மக்கள் தொகை முழுவதையும் பரிசோதனைக்குட்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்