தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடம் கட்டுப்பாட்டை மீறித் தீயால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஞாயிறன்று காலை இனந்தெரியாத காரணத்தால் தென்னாபிரிக்காவின் பாராளுமன்றத்தில் தீப்பிடித்தது. உண்டாகிய தீயை அணைக்க எடுத்துவரும் முயற்சிகளை மீறி அது தொடர்ந்தும் எரிந்து வருகிறது என்று தெரிவிரிக்கப்படுகிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரப் பல மணிகள் பிடிக்கலாம் என்று கேப்டவுனிலிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதற்கு முன்தினம் பாராளுமன்ற வளாகத்திலிருக்கும் புனித.ஜோர்ஜ் தேவாலயத்தில் மறைந்த மேற்றாணியார் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிக் கிரிகைகள் நடந்தன. அவர் அங்கே அடக்கம் செய்யப்பட்டார். அதனுடன் தொடர்புடைய பழைய கட்டடங்களொன்றிலேயே தீ முதல் கட்டமாக ஆரம்பித்திருக்கவேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அதையடுத்து வளாகத்தின் மற்றைய கட்டடங்களிலும் பரவிய தீ பாராளுமன்றத்தின் மூன்றாம் மாடிக்குப் பரவியிருக்கிறது. ஞாயிறன்று அதிகாலையில் ஆரம்பித்த தீ தொடர்ந்து ஆறு மணிகளாகப் பரவிவருகிறது. சுமார் 30 பேர் தீயணைப்பதில் போராடி வருகிறார்கள். ஏற்கனவே மிகப் பெருமளவில் சேதங்கள் விளைந்திருக்கின்றன என்றும், மேலும், பல மணிகள் அது தொடருமானால் சேதங்கள் பல மடங்காவது திண்ணம் என்றும் பாராளுமன்ற வட்டாரச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்