பாராளுமன்றக் கட்டடங்களில் தீப்பிடிக்கக் காரணமாக இருந்ததாக தென்னாபிரிக்காவில் ஒருவர் கைது.

ஞாயிறன்று அதிகாலையில் தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடங்களில் ஆரம்பித்த தீவிபத்தின் விளைவாக அக்கட்டடங்கள் பெருமளவில் எரிந்து நாசமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குக் காரணம் என்று ஒரு 50 வயது நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக நாட்டின் கட்டட வசதி அமைப்பு அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். 

இரண்டு சபைகளைக் கொண்ட தென்னாபிரிக்கப் பாராளுமன்றம் அருகருகே இருக்கும் மூன்று கட்டடங்களில் இயங்கிவருகிறது. அவைகளில் பழையது 1884 இல் கட்டப்பட்டது. தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கேயே கடமையாற்றி வந்தனர். அவர்கள் பின்னர், 1920, 1980 ஆண்டுகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களுக்கு மாறிவிட்டனர். 

பழமையான கட்டடத்திலேயே தீ பெருமளவில் பிடித்து அதைப் பெருமளவில் அழித்துவிட்டது. அங்கிருந்த அரிய ஏடுகளைக் கொண்ட வாசிகசாலையும் எரிந்துவிட்டது. பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்ட அதன் கூரை முழுவதுமாக வீழ்ந்து கட்டடமெங்கும் எரிந்த புகைக்காயங்களுடன் நிர்வாணமாகியிருப்பதாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றனர். அக்கட்டடத்தின் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.

புதிய கட்டடங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடும் பகுதிகள் தொடர்ந்தும் தீப்பிழம்புகளின் பிடியிலிருக்கின்றன. அவைகளில் பெரும்பகுதி அழிந்து வருவதாகத் தீயணைப்புப் படையின் விபரங்களிலிருந்து தெரியவருகிறது.

கட்டடங்களில் தீ பரவும்போது அதை அணைக்கத் தானாகவே செயற்படும் நீர்தெளிப்பான் அமைப்பையே [sprinkler system] கைது செய்யப்பட்டிருக்கும் நபர் செயற்படாமல் செய்திருக்கவேண்டும் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. நத்தார் தினத்துக்கு முன்பு அந்த அமைப்பு பரிசோதிக்கப்பட்டபோது எவ்விதப் பிழையுமின்றி அது இயங்கியதாக கட்டட வசதி அமைப்பு அமைச்சர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ரமபோசா உட்பட பல அமைச்சர்கள் தீவிபத்துப் பகுதியைச் சென்று பார்வையிட்டார்கள். “எங்கள் சரித்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் ஆழமான காயம் இது,” என்று பல அரசியல்வாதிகளும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்