தனிமைப்படுத்தல் காலம் பிரான்ஸில் ஏழு நாட்களாகக் குறைப்பு.
தொற்றாளருடன் தொடர்புடையோர்பூரணமாக தடுப்பூசி ஏற்றியிருப்பின் தனிமைப்படுத்தல் அவசியமில்லை.
பிரான்ஸில் தொற்றினாலும் தொற்றாளர்களோடு பழகிய காரணத்தினாலும் பல லட்சக் கணக்கானோர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். இந்த நிலைமை நாட்டின் பல்வேறு பணித் துறைகளிலும் ஆள்பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது. தொழில்கள் முடங்கிப் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையக்கூடிய ஆபத்து நிலை எதிர்நோக்கப்படுகிறது.
அதனைத் தவிர்ப்பதற்காக தனிமைப்படுத்தல் காலத்தை அரசு பத்து நாட்களில் இருந்து ஏழாகக் குறைத்திருக்கிறது. நாட்டின் பொதுச் சுகாதார அதிகார சபையின் ஒப்புதலோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் காலத்தின் இடையே சுய பரிசோதனைக்கான வசதிகளை வழங்குவதன் மூலம் தொற்று இல்லை என்பதை உறுதி செய்வது கொண்டு தனிமையில் இருந்து வெளியேறுவதை ஊக்குவிப்பது அரசின் நோக்கமாக உள்ளது.
பூரணமாகத் தடுப்பூசி ஏற்றியோர் :(Positive people).
தொற்றுக்கு இலக்கானால் ஏழு நாட்கள்தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஐந்தாவது நாளில் எளிய பரிசோதனை ஒன்றைச் (antigen test or PCR negative) செய்துகொள்வதன் மூலம் தனிமைப்படுவதை முடித்துக் கொள்ளலாம்.
தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள் தொற்றாளர் ஒருவருடன் தொடர்புகொள்ள நேரிட்டால் (contact cases) அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இனி இருக்காது. இத்தகையோர் தினமும் தங்களைப் பரிசோதனை செய்தவாறு வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.(பூரணமான தடுப்பூசி என்பது மூன்றாவது பூஸ்ரர் டோஸையும் உள்ளடக்கியது.)
தடுப்பூசி எதனையும் பெறாதோர் :(not vaccinated)
இத்தகையோர் தொற்றாளர்களாக இருந்தால் பத்து நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.ஆயினும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அதனைஏழாவது நாளில் முடித்துக்கொள்ளலாம். இவர்களில் தொற்றாளர்களுடன் தொடர்புடையோர்(contact cases) தங்களை ஏழுநாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். இரண்டு தடுப்பூசிகளை மட்டும் ஏற்றியோருக்கும் இந்த ஏழு நாள் தனிமை பொருந்தும். இவர்கள் முதல் நாளும், அடுத்து இரண்டு நாட்களின் பின்பும் நான்கு நாட்களுக்குப் பிறகும் தங்களைச் சுய பரிசோதனை செய்து தொற்றற்றவர் என்பதை நிரூபிப்பதன் மூலம் தனிமைப்படுத்தலை இடையில் முடித்துக் கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் என்ன என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொற்றாளர்களாக(Infected) இருந்தால் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும். இடையில் பரிசோதனையில்(PCR or antigen)தொற்றில்லை என்பது தெரியவந்தால் ஐந்து நாள்கள் தனிமைப்படுத்தல் போதுமானது. தொற்றாளர்களோடு தொடர்புகொண்ட சிறுவர்கள் வளர்ந்தோரைப் போன்றே ஏழு நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும். இடையில் செய்யப்படவேண்டிய சோதனைகளில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரிய வந்தால் பெற்றோர்கள் அதனை எழுத்து மூலம் உறுதி செய்த பிறகு கல்விச் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கலாம்.
சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்ஞாயிறு வாரப் பத்திரிகையாகிய”Journal du dimanche” இதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.
குமாரதாஸன். பாரிஸ்.